ADDED : ஆக 16, 2025 04:24 PM

சென்னை: '' ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? ஆட்சியாளனை அந்த அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு. என் மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
என்ன வேலை
அந்த முதலாளிகளுக்கு கீழ் வேலை செய்யப்போகிறார்கள். அவர் தன் கைகாசை போட்டு சம்பளத்தை கொடுக்க போகிறாரா? அரசு கொடுக்கும் பணத்தில் கொடுப்பாரா? அரசு கொடுக்கும் காசை வாங்கி சம்பளம் கொடுப்பதற்கு நடுவில் ஒரு ஏஜென்ட் எதற்கு? ஒரு முகவர் எதற்கு? நீ என்ன வேலை பார்க்கிறாய்? உனக்கு என்ன வேலை ?
யார் பணத்தில்
துப்புரவு பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டது. ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம் வேலை செய்ய போகிறார்கள். வேலை செய்யப்போகிறவர்களுக்கு காலை உணவு எப்படி போடப்போகிறார்கள். யார் காசில் போடப் போகிறார்கள்.
காலை உணவு போடுகிறேன். மருத்துவ காப்பீடு தருகிறேன். செத்துப்போனால் 10 லட்சம் கொடுக்கிறேன் என்கிறார்கள். இதை யார் காசில் கொடுக்க போகிறார்கள். நான் வேலை செய்வது முதலாளிக்கு. இவர்கள் காலை உணவு போடுவார்களாம். எங்களை சோற்றுக்கு செத்த பயலாகவே கட்சிகள் வைத்து இருக்கின்றன. இந்தப் பணத்தை எதில் இருந்து கொடுக்க போகிறார்கள். இவ்வளவு செலவு செய்யும் அரசு, தொழிலாளர்கள் கேட்பதை கொடுத்துவிடுவது தானே
நிறைவேறவில்லை
தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் என வாக்குறுதி கொடுத்தனர். 4.6 ஆண்டுகளாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் இந்த போராட்டம் தீவிரம் எடுக்கிறது. 4.6 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நீங்கள், இந்த வாக்குறுதியை மட்டும் எப்படி நிறைவேற்றுவீர்கள்.
மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின்உற்பத்தி அனைத்தையும் தனியார் தான் சிறப்பாக செய்வான் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள். அரசின் வேலை என்ன. நீங்கள் கையாலாகாதவன். தோற்றுப்போனவன். தகுதியற்றவன்.
கமிஷன் துறை
நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க முடியவில்லை 207 அரசு பள்ளிகளை மூடுகிறார்கள். இதற்கு பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது என அமைச்சர் மகேஷ் காரணம் சொல்கிறார். சாராய கடையை திறந்துவைத்து குடி குடி என்றால் குழந்தை எப்படி பிறக்கும். பிறப்பு விகிதம் எப்படி கூடும். அரசு பள்ளிக்கு வரும் போது பிறப்பு விகிதம் குறைந்து விடுகிறது. தனியார் பள்ளிகளுக்கு சாரை சாரையாக படையெடுக்கிறார்களே அப்போது பிறப்பு விகிதம் கூடி விடுகிறதா?
தனியார் பள்ளிகளுக்கு பிறப்பு விகிதம் எப்படி கூடுகிறது. இதில் பள்ளிக்கல்விக்கு ஒரு துறை, உயர்கல்விக்கு ஒரு துணை, கால்நடைக்கு ஒரு துறை, பால்வளத்துக்கு ஒரு துறை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமிஷன் வாங்குவதற்கு ஒரு துறை. கவலைப்படாமல் மொத்த துறைக்கும் கமிஷன் துறை என பெயர் வைத்துவிடுவது நல்லது. படிக்க வரலைனு பள்ளிகூடத்தை மூடுகிறார்கள். குடிக்கவரவில்லை என்றால் டாஸ்மாக் கடையை மூடுகிறார்களா? நாட்டை எதை நோக்கி நகர்த்துகிறீர்கள். கேட்டால் நல்லாட்சி என்கிறீர்கள்.
கூலி காலி
ஆட்சியாளனை குறை சொல்லி என்ன பயன். அந்த ஆட்சியாளனை அந்த அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு. என் மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
