ADDED : அக் 10, 2024 12:28 AM
சென்னை:புரட்டாசி மாதத்தில் பலரும் விரதம் கடைப்பிடிப்பதால், காய்கறிகள் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனாலும், தேவை அதிகம் என்பதால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
ஹரியானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் இருந்து வெங்காயம், உருளைக் கிழங்கு விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன.
அண்டை மாநிலங்களில், காய்கறிகள் அறுவடை இப்போதுதான் துவங்கியுள்ளன. மழையால் வட மாநிலங்களில் வெங்காயம், உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது; ஏற்றுமதியும் அதிகரித்து உள்ளது.
இதனால், தமிழகத்திற்கு குறைந்த அளவு காய்கறிகள் தான் விற்பனைக்கு வருகின்றன. புரட்டாசி மாதம் என்பதால், இங்கு பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால், காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளது. வரத்து குறைவால், அவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
இதுகுறித்து, கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:
சுங்க கட்டண உயர்வால், வாகன வாடகை அதிகரித்துள்ளது. காய்கறிகள் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதனால், பலவகை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
முன்பு கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கு மொத்த விற்பனை செய்யப்பட்ட பலவகை காய்கறிகள், இப்போது 50 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இவற்றை வாங்கி செல்லும் வெளி மார்க்கெட் வியாபாரிகள், வாகன வாடகை, மூட்டை ஏற்றி இறக்கும் கூலி, லாபம் ஆகியவற்றை கணக்கில் வைத்து, விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
அதன்படி, கிலோவிற்கு குறைந்தபட்சம் 20 முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
சாகுபடி செலவு, வாகன வாடகை காரணமாக, காய்கறிகள் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை. இனிவரும் காலங்களில், இந்த விலையில் காய்கறிகளை வாங்க, பொது மக்கள் பழகிக்கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
காய்கறிகள் மொத்த விலை நிலவரம்:
கிலோ காய்கறி - ரூபாய்
புடலங்காய் - 15 - 20
சுரைக்காய் - 15 - 20
பீர்க்கங்காய் - 25 - 35
பீட்ரூட் - 30 - 35
பாகற்காய் - 30 - 35
கொத்தவரை - 30 - 35
கோவக்காய் - 30 - 35
கோஸ் - 30 - 40
நுாக்கல் - 30 - 40
வெண்டைக்காய் - 35 - 40
சவ்சவ் - 35 - 45
கத்தரிக்காய் - 35 - 50
அவரைக்காய் - 40 - 50
சேப்பங்கிழங்கு - 40 - 50
உருளைக் கிழங்கு - 40 - 50
குடை மிளகாய் - 45 - 55
தேங்காய் - 50 - 55
பச்சை மிளகாய் - 50 - 60
சேனைக் கிழங்கு - 60 - 65
பெரிய வெங்காயம் - 60 - 70
சிறிய வெங்காயம் - 60 - 70
கேரட் - 60 - 70
முருங்கைக்காய் - 70 - 80
தக்காளி - 80 - 90
மாங்காய் - 90 - 100
பீன்ஸ் - 110 - 120
எலுமிச்சை - 130 - 140
இஞ்சி - 150 - 160
பச்சை பட்டாணி - 200 - 230