UPDATED : மார் 28, 2024 05:29 PM
ADDED : மார் 28, 2024 12:06 PM
முழு விபரம்

சென்னை: தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன்(மார்ச் 27) நிறைவடைந்தது. மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், அமமுக.,வின் தினகரன் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிக்கு ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. கடந்த மார்ச் 20ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் துவங்கியது. வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன்(மார்ச் 27) நிறைவடைந்தது. மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதியில் 18 பேர் 22 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று நடந்தது. வரும் மார்ச் 30ம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
வேட்பு மனு ஏற்பு
கோவையில் பா.ஜ.,வின் அண்ணாமலை,
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம்,
நீலகிரியில் பா.ஜ.,வின் எல்.முருகன்,
நெல்லையில் பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரன்,
மத்திய சென்னையில் பா.ஜ.,வின் வினோஜ் பி செல்வம்,
விருதுநகரில் பா.ஜ.,வின் ராதிகா,
தேமுதிக.,வின் விஜயபிரபாகரன்,
தேனியில் அதிமுக.,வின் நாராயணசாமி,
ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு,
திருவள்ளூரில் காங்., கட்சியின் சசிகாந்த்,
திண்டுக்கல்லில் மாக்கம்யூ., கட்சியின் சச்சிதானந்தம், எஸ்டிபிஐ, முபாரக் பாமக.,வின் திலகபாமா,
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூர், நதாகாவின் கவுசிக்
நீலகிரியில் அதிமுக.,வின் லோகேஷ் தமிழ்செல்வன்,
தூத்துக்குடியில் தி.மு.க.,வின் கனிமொழி,
ஈரோட்டில் அதிமுக.,வின் ஆற்றல் அசோக் குமார் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
ஜாதி சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுப்பி நிறுத்திவைக்கப்பட்ட நீலகிரி தொகுதி திமுக., வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு பின்னர் ஏற்கப்பட்டது.
வட சென்னை தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தி.மு.க., வேட்பாளர் கலாநிதி, அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இதே பெயரில் களமிறங்கி உள்ள மேலும் 5 ஓ.பி.எஸ்., வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
செல்வகணபதிக்கு இரண்டு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது, தண்டனை விவரத்தை தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து செல்வகணபதி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. அவரது வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, செல்வகணபதி வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் வேட்புமனு 5 மணி நேர பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அனைத்து கட்சியினரின் சார்பில் களமிறங்கி உள்ள முக்கிய தலைவர்களின் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

