நேற்று வரை தி.மு.க.,வை விமர்சித்தவர் இன்று வானுயர பாராட்டுகிறார் கவர்னர் மீது 'மாஜி' அமைச்சர் விமர்சனம்
நேற்று வரை தி.மு.க.,வை விமர்சித்தவர் இன்று வானுயர பாராட்டுகிறார் கவர்னர் மீது 'மாஜி' அமைச்சர் விமர்சனம்
ADDED : அக் 17, 2024 09:57 PM
விழுப்புரம்:''பா.ஜ.,வினரை பண்டாரம், பரதேசிகள் என கூறி வந்த தி.மு.க.,வினர், இப்போது அவர்களுடனேயே மறைமுகமாக கூட்டு சேர்ந்து விட்டனர்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், அளித்த பேட்டி:
மக்களின் பேராதரவுடன் வரும் 2026ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன், பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அந்த அளவுக்குத்தான் அரசியல் கள நிலவரம் உள்ளது.
திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக் கொள்ளும் தி.மு.க.,வினர், ஒரு காலத்தில் பா.ஜ.,வை பண்டாரம், பரதேசிகள் என விமர்சித்தனர். ஆனால், இப்போது பா.ஜ.,வுடன் இணைந்து, ஜால்ரா அடிக்கின்றனர். சொல்லப் போனால், அவர்களுடனேயே மறைமுகமாக கூட்டு சேர்ந்து விட்டனர்.
முதல்வர் ஸ்டாலின், டில்லியில் பிரதமரை பார்த்து கும்பிடு போட்டு வந்ததில் இருந்து, தமிழக கவர்னர் ரவி, தன்னுடைய ஸ்ருதியை மாற்றிக் கொண்டார். நேற்று வரை தி.மு.க., அரசின் மீதான குற்றம், குறையை கண்டுபிடித்து பொது வெளியில் விமர்சித்து வந்தார். அவர், இன்றைக்கு அதே தி.மு.க., அரசை வானுயர பாராட்டும் அளவுக்கு தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார்.
பா.ஜ.,வும் தி.மு.க.,வும் கூட்டணி வைத்துக் கொள்ளும் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் ஏதோ போகிற போக்கில் சொல்லவில்லை. நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது அதுதான் நடக்கப் போகிறது. மறைமுகமாக இரு தரப்பும் கூட்டு வைத்துள்ளனர் என்பதை எல்லோரும் அறிந்து வருகின்றனர். விரைவில் அது வெளிப்படையாகும். அது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பட்டவர்த்தனமாக தெரிய வரும்போது, இரு கட்சிகளின் முகத்திரையும் கிழியும்.
இவ்வாறு அவர் கூறினார்.