ADDED : ஜன 11, 2024 01:57 AM

உலக, தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
உலகை, இயற்கை எந்தெந்த ரூபத்தில் அழிக்கும் என்பதை முன்னோர் பஞ்ச பூதங்களாக வரையறுத்துள்ளனர். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களான இயற்கை சக்தியை எதிர்ப்பது, மனித சக்தியால் முடியாது.
இதற்கு, உலகம் முழுதும் பஞ்ச பூதங்களால் நிகழும் அழிவுகளே சான்று. 2004ல், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர், 'சுனாமி'யாக தமிழகத்தை சுழன்று அடித்த துயரத்தை, இன்றும் யாரும் மறக்க முடியாது. இதில், உயிர் கள், உடைமைகளை இழந்தவர்கள், இன்றும் அந்த வலியில் இருந்து மீளாமல் தவிக்கின்றனர்.
அடுத்து, ஆண்டுதோறும் மழை, வெள்ளம் தமிழக தலைநகரான சிங்கார சென்னையை ஒரு புரட்டு புரட்டுவது வாடிக்கையாகி வருகிறது. 'வரும் வெள்ளத்தை தடுக்கவும், வடிய வைக்கும் வழியும் எங்கள் கைவசம் உள்ளது' என, அரசியல் பண்ணி ஆட்சியை பிடிக்கின்றனரே ஒழிய, விடிவு தான் கிடைத்தபாடில்லை.
'ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டாகியும் ஏன் சரியான நடவடிக்கை இல்லை' எனக் கேட்டால், 'வழக்கத்தை விட அதிகமான மழை' என, அதிகாரிகள் தரப்பு சால்ஜாப்பு சொல்கிறது. இந்த சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்க வழி என்ன என யோசித்த முதல்வர் ஸ்டாலின், 'நம்மை காத்த பூதங்கள் நம்மை தின்னும் காலம் இது' என புத்தக வெளியீட்டு விழாவில், மழை வெள்ளத்தின் பழியை, பஞ்ச பூதத்தில் ஒன்றான நீர் மேல் சுமத்தி விட்டார்.
அப்படி என்றால், மழை நீர் வடிகால்களுக்கு என ஒதுக்கிய, 4,000 கோடி ரூபாயையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரே விழுங்கி விட்டதா என்று தான் எண்ண தோன்றுகிறது. எது எப்படியோ... ஆட்சியாளர்கள் செய்த தவறுகளுக்கு, பாவம், பஞ்ச பூதங்கள் பழிசுமக்க வேண்டியிருக்கிறது.

