தரைக்காற்று பலமாக வீசியதால் தரையிறங்க திணறிய விமானம்
தரைக்காற்று பலமாக வீசியதால் தரையிறங்க திணறிய விமானம்
ADDED : அக் 26, 2024 11:36 PM
சென்னை:சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கி ஒடுபாதையில் ஏற் பட்ட பிரச்னையால், மீண்டும் வானில் பறந்து, பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், 156 பயணியர், 8 ஊழியர்களுடன், நேற்று மதியம் சென்னை வந்தது. நேற்று மதியம் 12:40 மணிக்கு, சென்னை விமான நிலைய வான்வெளிப் பகுதிக்கு வந்த விமானம் தரையிறங்க, மதியம் 12.42 மணிக்கு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து 'சிக்னல்' கொடுக்கப்பட்டது.
அதன்படி, 12:43 மணிக்கு, பிரதான ஓடுபாதையில் விமானம் தரையிறங்கத் துவங்கியது. அந்த நேரத்தில், தரைக்காற்று அதிகமாக இருந்ததால், பாதுகாப்பாக தரையிறங்க முடியாது என்பதை உணர்ந்தார் விமானி.
உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, மீண்டும் உயரத்தில் பறக்கச் செய்தார். அதன் பின்னர், வானில் வட்டமடிக்கத் துவங்கியது அந்த விமானம்.
இதனால் பயணியர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில், விமானம் மீண்டும் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதியம் 12:58 மணிக்கு, முதலாவது பிரதான ஓடுபாதையில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி நின்றது.