குற்றங்களை தடுக்க வேண்டும் என போலீசார் உறுதி எடுக்க வேண்டும் : முதல்வர்
குற்றங்களை தடுக்க வேண்டும் என போலீசார் உறுதி எடுக்க வேண்டும் : முதல்வர்
UPDATED : ஆக 23, 2024 07:02 PM
ADDED : ஆக 23, 2024 06:25 PM

சென்னை: குற்றம் நடப்பதற்கு முன்னரே அதனை தடுக்க வேண்டும் என ஒவ்வொரு போலீசாரும் உறுதி ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையில் சிறப்பான பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறையினர் பதக்கங்கள் வாங்கியது நான் வாங்கியது போன்று மகிழ்ச்சியாக உள்ளது
காவல் துறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பதக்கம் வழங்க துவங்கி 55 ஆண்டுகள் ஆகிறது. முதல் காவல் ஆணையம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி . அதன் பின்னர் தான் மத்தியஅரசு காவல் துறையை நவீனமயமாக்கும் பணியை துவக்கியது. காவல்துறையில் பெண்களை இடம் பெற செய்தவர் கருணாநிதி. இன்றைய அணிவகுப்பில் பெண் காவலர் கமாண்டராக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
காவல்துறையினர் பதக்கங்களை வாங்கியதை பார்க்கும் போது நான் வாங்கிய மகிழ்ச்சி ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அனைத்து துறைகளும் எனக்கு நெருக்கமான துறைதான். அதிலும் காவல்துறை என்றால் கூடுதல் நெருக்கம்.மனித உரிமை குறியீட்டில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அமைதியான மாநிலத்தில் தான் வளர்ச்சி இருக்கும்.
தமிழகம் பெருமைமிகு மாநிலமாக மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் காவல் ஆணையம் துவங்கப்பட்டுள்ளது. காவல் ஆணையம் மூலம் காவல்துறையினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றி உழைத்தால் அங்கீகாரம் கிடைக்கும். கடமையை செய்தால் பாராட்டும் பலனும் உங்களை தேடி வரும்.
குற்றங்களின் எண்ணிக்கை பூஜ்யம் என்ற நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்பு அவசியம். தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்வதற்கு காவல் துறையின் அர்ப்பணிப்பு அளப்பரியது. குற்றமிழைக்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதை போலீசார் உறுதி ஏற்க வேண்டும்.
பெண்போலீசாருக்கு சலுகை
மகப்பேறு முடித்துவரும் பெண் காவலர்களுக்கு கணவர், உறவினர்கள் வசிக்கும் ஊரில் மூன்றாண்டுகள் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் பணி மாற்றம் வழங்கப்படும். குற்றங்களை கண்டறியும் வகையில் பெண்காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

