ADDED : டிச 20, 2024 06:50 AM

சென்னை: சென்னையில் அமைச்சரை சந்திக்க வந்த திருவண்ணாமலை விவசாயிகளை, போலீசார் திருப்பி அனுப்பினர்.
திருவண்ணாமலை மேல்மா கிராமத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராடி வருகின்றனர். இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் வேலுவை சந்திக்க, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று காலை சென்னை வந்தனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் வேலுவின் முகாம் அலுவலகத்திற்கு சென்றனர். கன்னியாகுமரியில், இம்மாதம் 31ம் தேதி, ஜன., 1ல் நடக்கவுள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார்.
இதையடுத்து, விவசாயிகள் அங்கேயே அமர்ந்திருந்தனர். உடனே, போலீசார், தொழில் துறை அமைச்சர் ராஜாவை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறி தலைமை செயலகத்திற்கு அழைத்து சென்றனர். விவசாயிகளை சந்தித்த அமைச்சர் ராஜா, இதுகுறித்து அரசிடம் பேசுவதாக கூறியதாக தெரிகிறது.
கன்னியாகுமரியில் இருந்த அமைச்சர் வேலு சென்னை திரும்பியதாக, யாரோ சொன்னதை கேட்டு, மீண்டும் அவரை சந்திப்பதற்கு, தீவுத்திடல் வழியாக விவசாயிகள் நடந்து சென்றனர். அவர்களை வழிமறித்து மாநகர பேருந்தில் ஏற்றி, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குஅழைத்து சென்ற போலீசார், திருவண்ணாமலைக்கு அனுப்பிவைத்தனர்.