அவங்களுக்கு மட்டும் தான் பதவி; நிரூபணம் செய்தது இந்த நியமனம்: எச்.ராஜா விமர்சனம்
அவங்களுக்கு மட்டும் தான் பதவி; நிரூபணம் செய்தது இந்த நியமனம்: எச்.ராஜா விமர்சனம்
ADDED : செப் 29, 2024 11:41 AM

காரைக்குடி: 'தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்திற்கும், ஹிந்து விரோதிகளுக்கும் தான் தலைமை பொறுப்பு என்பது உதயநிதி துணை முதல்வர் ஆனதன் மூலம் நிரூபணமாகி உள்ளது' என பா.ஜ., ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: துணை முதல்வர் பில்டப் ரொம்ப நாளாகவே நடந்தது. கருணாநிதி குடும்பத்தை தவிர தி.மு.க., தலைமை பொறுப்பு யாருக்கும் கிடையாது என்பதை பிரகனப்படுத்துகின்ற விஷயம் தான் உதயநிதி துணை முதல்வர் ஆவது. தி.மு.க.,வில் 60 ஆண்டு, 70 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு தலைமை பொறுப்பில் இடம் கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதை உறுதிப்படுத்துவதற்காக தான் இந்த துணை முதல்வர் பொறுப்பு. முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு என்று விளம்பரப்படுத்திவிட்டு, பழநியில் உதயநிதி பேசும்போது இது ஆன்மிக மாநாடு இல்லை என்று பேசினார். இவர்கள் முருகனையும் ஏற்றுக்கொள்ளவில்லை ஹிந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க., தொண்டர்களுக்கு இவர்கள் சொல்லும் செய்தி என்னவென்றால், உங்களுக்கெல்லாம் வேலை இல்லை; வெளியில் நில்லுங்கள் என்பதுதான்.
கே.என்.நேரு அடிக்கடி பெருமாள் கோவில் செல்வார். அவருக்கு முக்கியத்துவம் இல்லை; அவர் ஆன்மிகவாதி. தி.மு.க.,வில் ஹிந்து விரோதிகளுக்கு மட்டும் தான் தலைமை. செந்தில் பாலாஜி கண்டிஷன் பெயிலில் வெளியே வந்துள்ளார். நான் வேலைக்கு பணம் வாங்கினேன் என்று அவரே ஒப்புக் கொண்டார். கண்டிப்பாக இவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்.
இடைக்காலத்தில் வெளிக் காற்றை சுவாசித்து கொள்ள வெளியே விட்டுள்ளனர். இதில், கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. குளித்தலையில் தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி என்று ஸ்டாலின் சொன்னார். தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று சொன்னார். ஸ்டாலின் சொன்னது போல் இன்று ஜெயிலுக்கு சென்றுள்ளார்; அவரை ஸ்டாலின் இன்று தியாகி என்கிறார்.
அது என்ன வாய் இது என்ன வாய் என்று தெரியவில்லை. பா.ஜ.,விற்கு பி டீம் தேவையில்லை. நாங்கள் ஒரே டீம்தான். மோடி டீம் தான். சமீப காலமாக என்கவுன்டர் மட்டுமல்ல; காவல்துறை கஸ்டடி இறப்பும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் படுகொலைகள் நடக்கிறது. திராவிட .அரசியலில் முக்கியத்துவம் பெறப்பெற மக்களிடம் ஒழுக்கம் நெறிமுறைகள் கெட்டுப் போய்விடும் என்பதற்கு இன்று தமிழ்நாடு உதாரணம்.இவ்வாறு ராஜா தெரிவித்தார்.