/
செய்திகள்
/
தமிழகம்
/
வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைக்கும் திட்டம்: அரசியல் சிபாரிசுகளால் பயனாளிகள் தேர்வில் நெருக்கடி ரூ.1.50 கோடி மானியம் என்றால் சும்மாவா?
/
வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைக்கும் திட்டம்: அரசியல் சிபாரிசுகளால் பயனாளிகள் தேர்வில் நெருக்கடி ரூ.1.50 கோடி மானியம் என்றால் சும்மாவா?
வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைக்கும் திட்டம்: அரசியல் சிபாரிசுகளால் பயனாளிகள் தேர்வில் நெருக்கடி ரூ.1.50 கோடி மானியம் என்றால் சும்மாவா?
வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைக்கும் திட்டம்: அரசியல் சிபாரிசுகளால் பயனாளிகள் தேர்வில் நெருக்கடி ரூ.1.50 கோடி மானியம் என்றால் சும்மாவா?
ADDED : அக் 06, 2025 02:15 AM
சென்னை: வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைப்பதற்கு, ஒரு தொழில்முனைவோருக்கு, 1.50 கோடி ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வதில், வேளாண் துறைக்கு நெருக்கடி அதிகரித்துஉள்ளது.
வேளாண் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என, தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, 10 கோடி ரூபாய் வரையிலான புதிய மதிப்பு கூட்டுதல் திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக, 25 சதவீதமும், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பகுதிகளில், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக, 10 சதவீதமும் என மொத்தம், 35 சதவீதம் மானியம் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது.
திடீர் நெருக்கடி இத்திட்டத்தின் கீழ், தக்காளி, மிளகாய், மஞ்சள், வாழை, முருங்கை, மா, மல்லிகை, சிறுதானியங்கள் போன்ற வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்ய வேண்டும்.
திட்ட மதிப்பீட்டில், பயனாளிகள் பங்களிப்பு குறைந்தபட்சம், 5 சதவீதமாக இருக்க வேண்டும். மீதமுள்ள தொகை, வங்கி கடனாக பெறப்பட வேண்டும்.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தொழில்முனைவோருக்கு, தொழில் திட்டத்திற்கு ஏற்ப மானிய தொகை அதிகபட்சமாக, 1.50 கோடி ரூபாய் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
மானிய தொகை முதல் தவணையாக, 60 சதவீதமும், இரண்டாம் தவணையாக, 40 சதவீதமும், வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், 100 இடங்களில், வேளாண் விளைபொருட்கள் மதிப்புகூட்டும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதற்காக விவசாயிகள் மட்டுமின்றி, சுய உதவி குழுக்கள், தொழில் முனைவோர் என, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். 100 பயனாளிகள் பட்டியலை இறுதி செய்வதில், வேளாண் துறைக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, வேளாண் வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதிப்பு கூட்டப்பட்ட தொழில் நுட்பத்தை தீவிரப்படுத்த, இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. முழுமையாக திட்டத்தை செயல்படுத்தினால், வளர்ந்த நாடுகளை போல தமிழகத்திலும், வேளாண் விளைபொருட்கள் வீணாவது கட்டுப்படுத்தப்படும்.
நேரடி கண்காணிப்பு அதற்கேற்ப, திட்டத்தில் தகுதியான பயனாளிகளை சேர்க்க வேண்டும். ஆனால், மானியத்தொகை அதிகம் என்பதால், அதன் சலுகைகளை பெறுவதற்கு, போலியாக பலரும் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
இவர்களில் பலருக்கு அந்தந்த மாவட்ட அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், தகுதியான, 100 பேரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. அரசியல் குறுக்கீடு இன்றி, பயனாளிகள் பட்டியலை இறுதி செய்வதற்கு, முதல்வர், அமைச்சர் நேரடி கண்காணிப்பு அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.