அண்ணா பல்கலை சம்பவத்திற்கு காரணம் துணைவேந்தர் இல்லாததே: ப.சிதம்பரம்
அண்ணா பல்கலை சம்பவத்திற்கு காரணம் துணைவேந்தர் இல்லாததே: ப.சிதம்பரம்
ADDED : டிச 30, 2024 11:35 PM
காரைக்குடி: ''சென்னை அண்ணா பல்கலை சம்பவத்திற்கு துணைவேந்தர் இல்லாதது தான் காரணம்,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்தியாவை புதிய பொருளாதார பாதையில் அழைத்துச் சென்றவர் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அவர் பிரதமராக இருந்த போது 24 முதல் 27 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். ஐம்பது சதவீதம் பின் தங்கிய மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள் ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைகளை பொறுத்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது.
சென்னை அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டிக்கிறேன். இதற்கு காரணம் அண்ணா பல்கலை உட்பட 6 பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் இல்லை. இது வருத்தமளிக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது இங்கிலாந்து கற்றுக் கொடுத்த பாடமா என தெரியவில்லை. பொங்கல் பரிசு தொகை வழங்காதது தேர்தலை பாதிக்காது. ஒரு விஷயத்தால் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா மாநிலத்திலும் அதிகமான குற்றங்கள் நடக்கிறது. இதனை தடுப்பது தண்டிப்பது அரசின் பொறுப்பு. அரசின் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உலகத்தில் விந்தையான ஜி.எஸ்.டி., இந்தியாவில் தான் உள்ளது. ஜி.எஸ்.டி., சட்டமே தவறு. அதை அமல்படுத்தியதும் தவறு. இந்த வரி தொடர்பாக அமெரிக்கா கூறிய கருத்தை நான் ஏற்கவில்லை. அந்தந்த நாட்டு வரியை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அந்நிய நாடுகள் தீர்மானிக்க முடியாது. இந்தியர்கள் மற்ற ஆசிய அறிவாளிகள் இல்லாமல் அமெரிக்க பொருளாதாரம் நடக்காது. அவர்களுக்கு தேவை என்றால் விசா தருவார்கள் என்றார்.