ADDED : ஜன 04, 2024 04:00 AM

''தேர்வு முடிவுகள் வெளியிடுறது தாமதமாகுதுங்க...'' என, இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 245 உரிமையியல் நீதிபதி காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு 2023 ஆக., 19ல் நடந்துச்சு... தேர்வை, 12 ஆயிரத்து 37 பேர் எழுதினாங்க...
''இதன் ரிசல்ட் கடந்த அக்., மாசம் 11ல் வெளியானதுங்க... இதுல, 2,500 பேர் தேர்ச்சி பெற்றாங்க... அடுத்து, மெயின் தேர்வு நவ., 4 மற்றும் 5ம் தேதி நடந்துச்சுங்க... இதை, 2,500 பேரும் எழுதியிருக்காங்க...
''டிசம்பர்ல ரிசல்ட் வெளியாகும்னு அறிவிச்சிருந்தாங்க... ஆனா, ஜனவரியே பிறந்தும், இன்னும் முடிவுகள் வெளியாகலைங்க... டி.என்.பி.எஸ்.சி.,யில நிறைய காலியிடங்கள் இருக்கிறது தான், இந்த தாமதத்துக்கு காரணமுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கணக்கு காட்டணும்னு, 'டிடி'யா வசூல் பண்றா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சேலத்துல, தி.மு.க., இளைஞரணி மாநாட்டை பிரமாண்டமா நடத்தி, உதயநிதியை, 'புரமோட்' பண்ண ஏற்பாடு நடக்கறதோல்லியோ... மாநாட்டு தேதிகளை, மழை, வெள்ளத்தால ரெண்டு முறை மாத்தினா ஓய்...
''அடுத்த தேதியை இன்னும் அறிவிக்கல... அதே நேரம், மாநாட்டு செலவுக்கு, கட்சி நிர்வாகிகளிடம் வசூல் நடக்கறது... குறிப்பா, தி.மு.க.,வை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளிடம், மாவட்டச் செயலர்கள் மூலம் நிதி வசூல் செய்யறா ஓய்...
''ஊராட்சி தலைவர்கள் தலா, 50,000 ரூபாய் வீதம், 'பொதுச் செயலர், தி.மு.க.,' என்ற பெயரில், 'டிடி' எடுத்து மாவட்ட நிர்வாகிகளிடம் குடுக்கறா... அதே மாதிரி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள்ல பதவியில இருக்கற கட்சியினரும், அவாவா பதவிக்கு ஏற்ப, லட்சக்கணக்குல பணத்தை, 'டிடி' எடுத்து குடுக்கறா...
''நாளைக்கு, 'கட்சி நிர்வாகிகள் தந்த நிதியில தான் மாநாடு நடந்துச்சு'ன்னு கணக்கு காட்டவே, 'டிடி'யா வசூல் பண்றாளாம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்டயும் ஒரு வசூல் கதை இருக்குல்லா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை மாதவரம், அம்பத்துார் ஆவின் பண்ணைகள்ல, 70 டிரைவர்கள் வேலை பார்க்காவ... அம்பத்துார் ஆவின்ல இருந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆறு மாசத்துக்கு முன்னாடி, கலெக்டர் பதவி உயர்வுல தென்மாவட்டத்துக்கு போயிட்டாங்க வே...
''அதுக்கு பதிலா, புது ஐ.ஏ.எஸ்., அதிகாரியை இதுவரைக்கும் நியமிக்கல... இதனால, துணை மேலாளர் ஒருத்தரை, பொறுப்பு அதிகாரியா போட்டிருக்காவ வே...
''இவர், டிரைவர்கள்கிட்ட, மாமூல் கேட்டு வாங்குதாரு... பணம் தர்ற டிரைவர்களுக்கு லைட்டான டூட்டியும், பணம் தராத டிரைவர்களுக்கு கஷ்டமான பணியும் குடுக்காரு வே...
''லைட் டூட்டினா, கையெழுத்தை மட்டும் போட்டுட்டு வீட்டுக்கு போயிடலாமாம்... இதுக்கு, 50,000த்துல இருந்து 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்காரு... இதனால, பொறுப்பு அதிகாரி மீது சீனியர் டிரைவர்கள் பலரும் கோபத்துல இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே, ''முத்துகுமார், இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடி எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.