நகரங்கள் தவிர பிற இடங்களில் முட்டை சில்லரை விலை 8 ரூபாய்!
நகரங்கள் தவிர பிற இடங்களில் முட்டை சில்லரை விலை 8 ரூபாய்!
UPDATED : டிச 26, 2025 09:14 AM
ADDED : டிச 25, 2025 11:35 PM

நாமக்கல்: தமிழகத்தில், முட்டை சில்லரை விற்பனை விலை, 8 ரூபாயாக உயர்ந்துள்ளது. விழாக் காலத்தில் ஏற்பட்ட விலை உயர்வால், முட்டை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், முட்டை சாப்பிடுவதை டாக்டர்கள் பரிந்துரைப்பதால், அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, கோழி முட்டையை உணவாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால், முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், குளிர் காலம் என்பதால், தற்போது முட்டை உற்பத்தி, 10 சதவீதம் சரிந்துள்ளது.
இதனால், முட்டை விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது, புதிய உச்சமாக, நகரங்களில் 7 முதல் 7.10 ரூபாய் வரையிலும், பிற இடங்களில், முட்டை சில்லரை விற்பனை விலை, 8 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
புதிய உச்சம்
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என விழாக்காலம் என்பதால், முட்டை விலை உயர்வால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் சத்துணவு திட்டம், உள்ளூர் மற்றும் அணடை மாநில விற்பனை போக, மீதமுள்ள 35 முதல் 45 லட்சம் முட்டைகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடந்த நவம்பர் துவக்கத்தில், முட்டை கொள்முதல் விலை, 5 ரூபாய் 40 காசாக இருந்தது. ஆனால் டிசம்பரில், 6 ரூபாய் 10 காசாக உயர்ந்தது. தற்போது புதிய உச்சமாக, 6 ரூபாய் 40 காசு வரை உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களாக இதே விலை தொடர்கிறது. இந்த மாத சராசரி விலை, 6 ரூபாய் 19 காசாக உள்ளது. தற்போது சில்லரை விற்பனையில் ஒரு முட்டை, 7 முதல் 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
இது குறித்து, 'நெக்' எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் கூறியதாவது: குளிர் காலங்களில் கோழிகள் தீவனம் உண்பது குறைந்து விடும். இதனால், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கத்தை விட, முட்டை உற்பத்தி, 10 சதவீதம் வரை சரிந்து விடும்.
தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. கடந்த நவம்பரை விட, தற்போது முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
தினமும், 85 லட்சம் முதல், 1 கோடி வரை முட்டைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, 'கேக்' தயாரிப்புகளுக்காக உள்ளூர் தேவையும் அதிகரித்துள்ளது.உற்பத்தி குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
சில்லரை விற்பனையை பொறுத்தவரை ஏற்றுக்கூலி, இறக்கு கூலி மற்றும் லாரி வாடகை போன்ற காரணங்களால், ஒரு முட்டை 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். விலை உயர்வு, கோழிப்பண்ணை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், ஏழை எளிய மக்களை கவலை அடையச் செய்துள்ளது.

