ADDED : டிச 01, 2024 05:49 AM

திருவள்ளூர்:'பெஞ்சல்' புயல் மழை காரணமாக, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் குளமாக தேங்கியுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புயல் காரணமாக மரங்கள் உடைந்து விழுந்தன.
பொன்னேரி
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாயுமான் செட்டி தெருவில் நேற்று, குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீட்டு உபயோக பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகின. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி
திருத்தணி ஒன்றியம், குமாரகுப்பம், தாடூர், செருக்கனுார் பங்களாமேடு, சிங்கராஜபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் பழங்குடியினர் குடியிருப்பு சுற்றியும் மழைநீர் சூழ்ந்தது. இதனால், 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருவாலங்காடு
திருவாலங்காடு ஒன்றியம், சின்னகளக்காட்டூரில் உள்ள மேட்டுத்தெருவில், மலர்விழி என்பவரது ஓட்டு வீட்டின் கூரையும், திருவாலங்காடு பெரிய தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது ஓட்டு வீட்டின் கூரையும் உடைந்து விழுந்தன.
இதில், வீட்டில் வசிப்பவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பூண்டி நிலவரம்
பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு, நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு 290 கன அடி, மழைநீர், 390 கன அடி என, மொத்தம், 680 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 0.557 டி.எம்.சி., நீர் உள்ளது.
நீர்மட்டம், 35 அடி. தற்போது, 22.84 அடி. இங்குள்ள இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 100 கன அடி நீர் திறக்கப்பட்டு, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.
பிச்சாட்டூர் ஏரி
பிச்சாட்டூர் ஏரியில், நேற்று மதியம் 2:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 1,900 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில், 1.043 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 24.50 அடி.

