தேர்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற விதி சிறுபான்மை கல்லுாரிகளுக்கு பொருந்தாது
தேர்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற விதி சிறுபான்மை கல்லுாரிகளுக்கு பொருந்தாது
ADDED : மார் 28, 2025 01:43 AM

சென்னை: 'கல்லுாரிகளில் முதல்வர், உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு, தேர்வு குழு அமைக்க வேண்டும் என்ற பல்கலை மானிய குழு விதிமுறைகள், சிறுபான்மை கல்லுாரிகளுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பெண்கள் கிறிஸ்துவ கல்லுாரி, சென்னை கிறிஸ்துவ கல்லுாரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி, லயோலா கல்லுாரி மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, விழுப்புரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் கலை அறிவியல் கல்லுாரி ஆகியவற்றில், பல்கலை மானிய குழுவின் விதிகளுக்கு முரணாக, தேர்வு குழு அமைக்காமல், முதல்வர், உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கூறி, 66 உதவி பேராசிரியர்கள், ஒரு முதல்வர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து, சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை உத்தரவு பிறப்பித்தன.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லுாரி நிர்வாகங்கள் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
பேராசிரியர்கள், முதல்வர் நியமனங்களுக்கு ஒப்புதல் மறுத்து, இரு பல்கலைகளும் அளித்த காரணங்கள் ஏற்புடையதல்ல. 'பல்கலை மானிய குழு விதிமுறைகள்-- 2018' சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விதிமுறையையும் எதிர்த்து, வழக்கு தாக்கல் செய்ய அவசியமில்லை. எனவே, 66 உதவி பேராசிரியர்கள், ஒரு முதல்வர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து,
பல்கலைகள் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உதவி பேராசிரியர்கள், முதல்வர் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்து, நான்கு வாரங்களில் சம்பந்தப்பட்ட பல்கலைகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.