ADDED : அக் 28, 2025 05:24 AM

சென்னை : இரண்டாவது, 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயிலின் தயாரிப்பு பணி முடிந்து, அடுத்த கட்ட சோதனைக்காக, மத்திய பிரதேசத்துக்கு, ஐ.சி.எப்., அனுப்பியுள்ளது.
'வந்தே பாரத்' வரிசையில், படுக்கை வசதியுள்ள, 'ஸ்லீப்பர்' ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முடிந்து, சோதனை ஓட்டம் நடத்த தயாராக இருக்கிறது.
இந்நிலையில், சென்னை ஐ.சி.எப்., ஆலையில், இரண்டாவது ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி துவங்கி முடிந்துள்ளது. அடுத்து கட்ட சோதனை நடத்த, மத்திய பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நீண்ட துாரம் செல்லும் தடத்தில், 'ஸ்லீப்பர்' ரயில் ஒன்று மட்டுமே போதாது. மற்றொரு ரயிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என, ரயில்வே தெரிவித்தது. அதன்படி, இரண்டாவது ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ரயில்வே வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பி உள்ளோம். பின், ராஜஸ்தானில், கோட்டா - லாபன் இடையே, மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்தப்படும். அதன்பின், இந்த இரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் சேவையும் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

