ADDED : அக் 01, 2025 12:21 AM

திருப்பூர்; மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தீபாவளி பண்டிகையையொட்டி விதை வெடிகள் வழங்கும் திட்டத்துக்கு, தோட்டக்கலைத்துறை மூடுவிழா கண்டது; இம்முறை, இத்திட்டம் மீண்டும் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புவி வெப்பமயமாதல் காரணமாக, காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசு தவிர்க்கவும், மத்திய, மாநில அரசுகள் மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன. அதிலும், தீபாவளி என்றாலே விதவிதமான ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள் தான் நினைவுக்கு வரும்; புதிது, புதிதாக சந்தையில் அறிமுகமாகும்; இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெறும்.
இந்நிலையில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட ஒவ்வொரு விசேஷங்களின் போதும், பள்ளி, கல்லுாரிகள் துவங்கி, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என, எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் மரக்கன்று நட்டு, பசுமையை வளர்க்க வேண்டும் என, அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் உள்ள மாடி தோட்டங்களில், காய்கறி மற்றும் கீரை வளர்ப்பும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இதனை வலியுறுத்தும் விதமாக, கடந்த, ஐந்து ஆண்டுக்கு முன் தோட்டக்கலைத் துறை சார்பில் விதை வெடிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, சென்னையில் விதை வெடிகள் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் வழங்கப்பட்டது. லஷ்மி வெடி, புஸ்வாணம், சங்கு சக்கரம், கம்பி மத்தாப்பு போன்ற பட்டாசுகள் வடிவத்தில், களிமண்ணில் செய்து, அதில் விதைகள் பதித்து, வினியோகம் செய்யப்பட்டன. அதில், வகையில் வேம்பு, பச்சை மிளகாய், கீரை வகைகள், கத்தரி, வெண்டை உள்ளிட்ட என செடி, கொடி விதைகள் மற்றும் சிறிய ரக வகை விதைகள் இடம் பெற்றிருந்தன.
இவற்றை வெடிக்க முடியாது; மாறாக, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் நினைவாக, விதைத்து, வளர்த்தெடுக்க முடியும். இந்த விதை வெடிகள், 5 ரூபாய்க்கு வழங்கப்பட்டன. விதை வெடிகள் திட்டத்துக்கு, தோட்டக்கலைத்துறையினர் மூடு விழா செய்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இம்முறை தீபாவளி பண்டிகையின் போது, பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்த, விதை வெடிகள் திட்டம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.