மாமியாரை கிண்டல் செய்தவரை கிழித்து தொங்கவிட்ட மருமகன்
மாமியாரை கிண்டல் செய்தவரை கிழித்து தொங்கவிட்ட மருமகன்
ADDED : ஜன 25, 2024 01:00 AM
திரு.வி.க.நகர்:சென்னை, திரு.வி.க. நகர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை செய்பவர் மோகன், 24. இவர் மது போதையில், கடந்த 23ம் தேதி திரு.வி.க.நகர் மீன்மார்க்கெட்டில், தங்கம் என்ற பெண்ணை கேலி செய்துள்ளார்.
இதுகுறித்து, தன் மருமகன் ஸ்ரீதர் என்பவரிடம் தங்கம் புகார் கூறியுள்ளார். ஸ்ரீதர் கடும் கோபத்துடன் புறப்பட்டார்.
மாமியாரை கேலி செய்த அதே திரு.வி.க.நகர் மீன்மார்க்கெட்டில் மோகன் இருப்பது தெரியவந்தது. அங்கு இரவு 11:30 மணியளவில், மோகனிடம், 'என் மாமியாரை எப்படி கிண்டல் செய்யலாம்' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதை அடுத்து, மோகனை கத்தியால் சரமாரியாக கிழித்தார்.
தலை மற்றும் இரண்டு கைகளிலும், 40 தையல் போடும் அளவுக்கு மோகனை கத்தியால் கிழித்து போட்டுள்ளார் ஸ்ரீதர். மோகன் வெட்டுப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட, திரு.வி.க.நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று, கதறியபடி புகார் கூறியுள்ளார்.
உடனடியாக மோகனை, 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தலைமறைவாகி விட்ட ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.