கேலோ இந்தியா விழா ஏற்பாடு விளையாட்டு ஆணையம் தவிப்பு
கேலோ இந்தியா விழா ஏற்பாடு விளையாட்டு ஆணையம் தவிப்பு
ADDED : ஜன 18, 2024 12:50 AM
சென்னை:கேலோ இந்தியா விழாவிற்கான முன்னேற்பாடுகளை முடிக்க முடியாமல், கடைசி நேரத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிதவித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில், நாளை முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.
இவ்விழாவை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வரவுள்ளார்.
கேலோ இந்தியா போட்டிக்காக, நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 100 கோடி ரூபாய்க்கு மேல் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வழக்கமாக, இதுபோன்ற பணிகளை, பொதுப்பணித்துறை வாயிலாக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், இம்முறை, அரசிடம் பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரடியாக களமிறங்கி, ஒப்பந்ததாரர் வாயிலாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
போட்டி துவங்குவதற்கு ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், நேரு விளையாட்டு அரங்கிற்கு புதிய நுழைவு வளைவு அமைக்கும் பணி அவசர கதியில் நடந்து வருகிறது.
இதற்காக, அங்கிருந்த பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளன. இப்பணிகளை முடிக்க முடியாமல், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திணறி வருகிறது.
புதிய நுழைவாயில்களுக்கான இரும்பு வளைவுகளை, இரண்டு நாட்களாக, 'வெல்டிங்' செய்து பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திறந்தவெளி அரங்கில் நடக்க இருந்த விழாவை, உள் விளையாட்டு அரங்கிற்கு மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நேற்று ஆலோசனை நடத்திய தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளை கண்டித்ததாக தெரிகிறது.
'இப்பணிகளை, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்து, விழா ஏற்பாடுகளில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கவனம் செலுத்தி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
'அவசரப்பட்டு அரசிடம் அனுமதி பெற்ற தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், கடைசி நேரத்தில் பரிதவித்து வருகின்றனர்' என்கின்றனர் விபரம் அறிந்த அதிகாரிகள்.