சென்னையில் எஸ்.பி.பி., சாலை... பெயர் சூட்டி கவுரவித்தது தமிழக அரசு
சென்னையில் எஸ்.பி.பி., சாலை... பெயர் சூட்டி கவுரவித்தது தமிழக அரசு
UPDATED : செப் 25, 2024 06:16 PM
ADDED : செப் 25, 2024 06:12 PM

சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை, அவரது வீடு இருக்கும் காம்தார் நகர் முதல் தெருவுக்கு சூட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடும் நிலா என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.பி.பி., கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார்.
அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு இவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று அவருக்கு 4வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எஸ்.பி.பி.,யை கவுரவிக்கும் விதமாக, அவர் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது பெயருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் முன் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு எஸ்.பி.பி.,யின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.