UPDATED : அக் 07, 2026 08:22 PM
ADDED : அக் 07, 2026 07:54 PM
ஆட்சி மாறியும் மாறாத அதிகாரிகள்:
தமிழகத்தில் காளி கோயில்களின் ஒன்றான சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் மனைவியுடன் வழிபட ரகசியமாக வந்திருந்தார். உச்சி கால பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து அய்யனார் சன்னதியில் வைத்து சில பரிகார பூஜைகளை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர் காரில் இருந்து இறங்கியது முதல் மீண்டும் காரில் ஏறும் வரை கோயில் ஊழியர்கள் அவருக்கு பணிவிடை செய்தபடியே இருந்தனர்.
தரிசனம் முடிந்து செயல் அலுவலர் அலுவலகத்தில் ஓய்வு எடுத்த பின் கிளம்பி சென்றார். அவர் வந்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இதனைக் கண்ட அவருடன் வந்த உறவினர் கண்ணைக் காட்ட உடனே கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் பறந்தோடி வந்து பத்திரிகையாளர்களை சூழ்ந்து கொண்டு யாரைக் கேட்டு படம் எடுத்தீர்கள், கோயிலில் படம் எடுக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என வாக்குவாதம் செய்தனர்.
ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் இன்னமும் தி.மு.க.,விற்கு விசுவாசமாகவே உள்ளனர் என புலம்பியபடியே பத்திரிகையாளர்கள் கலைந்தனர்.
