UPDATED : அக் 03, 2025 03:21 PM
ADDED : அக் 02, 2025 06:21 PM

நிருபர்கள் காகிதத்தில் செய்தியை எழுதி, பக்கத்து ஊருக்கு வரும் டவுன் பஸ் டிரைவரிடம் கொடுத்து திருநெல்வேலிக்கு அனுப்புவார்கள். திருநெல்வேலி பஸ் நிலையத்தில், தினமலர் ஆபீஸ் பாய் காத்திருந்து, பஸ் வந்ததும் டிரைவரிடம் கவரை வாங்கி ஆபீசில் கொண்டு வந்துசேர்ப்பார்.
இது தவிர, ரேடியோவில் வரும் செய்திகளை கேட்டு செய்தி எழுதி அச்சு கோர்ப்பார்கள். சென்னை, மதுரை, டில்லியில் இருந்து டெலிபோனில் செய்தி கொடுப்பார்கள். பிடிஐ என்கிற பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி ஏஜன்சிக்கு தினமலர் சந்தாதாரராக இருந்தது. அவர்கள் மதுரை வரையில் டெலிபிரின்டர் என்கிற மின் தட்டச்சு கருவி மூலமாக செய்தி அனுப்புவார்கள். பேப்பர் ரோல் அதில் பொருத்தி இருக்கும். எங்கெங்கோ உருவான செய்திகள் எல்லாம் சென்னையில் அல்லது டில்லியில் இருந்து தொலை அச்சு முறையில் அந்த பேப்பர் ரோலில் பதிவாகும்.
மதுரை பிடிஐ ஆபீசில் இருந்து திருநெல்வேலி தினமலர் ஆபீசுக்கு கொண்டுவரப்படும். சுருள் சுருளாக வரும் அந்த அச்சிட்ட பேப்பர் ரோல்களை விரித்தால் பல நூறு மீட்டர் நீளம் வரும். அதில் ஒவ்வொரு செய்தியாக கத்தரித்து அடுக்க வேண்டும். அத்தனையும் படித்து பார்த்து தேவையான செய்திகளை செய்தி ஆசிரியர் எடுத்து கொடுப்பார்.
ஆங்கிலத்தில் அச்சிட்டுள்ள அந்த செய்திகளை உதவி ஆசிரியர்கள் தமிழாக்கம் செய்வார்கள்.
போனில் சொல்லப்படும் மிக முக்கியமான செய்திகள் தவிர்த்து, இவ்வாறு டெலிபிரின்டர் மூலமாக வரும் செய்திகள் வாசகர்களை அதற்கு அடுத்த நாள்தான் சென்றடையும். இந்த கால இடைவெளியை போக்க, திருநெல்வேலியிலேயே டெலிபிரின்டர் நிறுவ கேட்டது தினமலர். பிடிஐ கைவிரித்து விட்டது.
ஏனென்றால், டைப் செய்யப்படும் எழுத்துகளை எலக்ட்ரிக் பல்ஸ்களாக மாற்றி, தொலை தூரத்துக்கு அனுப்பி, அங்கே அந்த சிக்னல்களை மீண்டும் எழுத்து வடிவத்துக்கு மாற்றி அச்சிட வேண்டும். அதற்கு ஒலி சிக்னல்களை அனுப்பும் டெலிபோன் கேபிளை காட்டிலும் உயர்வான கேபிள் இணைப்பு தேவை. அதுவும் 160 கிலோமீட்டர் தூரத்துக்கு. மத்திய அரசுக்கு சொந்தமான தலைமை தபால் நிலையங்களில் கூட அந்த வசதிகள் இன்னும் ஏற்படுத்தாத நிலையில், பிடிஐக்கு எப்படி செய்து தருவார்கள்?அதுவும் அந்த ஏஜன்சிக்கு திருநெல்வேலியில் இருக்கும் ஒரே சந்தாதாரர் தினமலர். எப்படி கட்டுபடி ஆகும்?
முடியாததை முடித்து காட்டுவது தானே ராமசுப்பையர் ஸ்டைல்? ஆகவே, இதற்கும் டில்லி வரை அழுத்தம் கொடுத்து போராடி, தினமலர் அலுவலகத்துக்கு பிரத்யேக கேபிள் இணைப்பு கொடுத்து பிடிஐ டெலிபிரின்டரையும் நிறுவச் செய்தார். நிமிடத்துக்கு 75 வார்த்தைகள் வீதம் ஒரு மணி நேரத்தில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட வார்த்தைகளில் செய்திகளை மழையாக கொட்டும் அந்த கருவியை மந்திரக்கோல் ரேஞ்சுக்கு அதிசயமாக பார்த்தார்கள்.
1966 ஜனவரி 1ம் தேதி தலையங்கத்தில் இந்த தகவலை அறிவித்து, இது திருநெல்வேலி பதிப்பின் வாசகர்களுக்கு தினமலர் வழங்கும் புத்தாண்டு பரிசு என முத்திரை குத்தினார்கள். ஏழு நாட்களுக்கு தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை வாசகர்கள், பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிடலாம் என்றும் அறிவித்ததால், மேஜிக் மெஷினை பார்க்க கூட்டம் அலைமோதியது.
பிற்காலத்தில் தினமலர் பல பதிப்புகள் தொடங்கி பெரிதான நேரத்தில், பிடிஐ தவிர யுஎன்ஐ ஏஜன்சிகள் தவிர, பதிப்புகளுக்கு இடையிலான செய்தி பரிமாற்றத்துக்கும் சேர்த்து ஏழெட்டு டெலிபிரின்டர்கள் நிறுவப்பட்டன. அதற்காக தனி அறைகள் உருவாக்கப்பட்டன.
ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தி தமிழ் செய்திகளை அனுப்பும் வழக்கம் டெலிபிரின்டர்களால் உருவானது தான். 247 க்கு பதில் வெறும் 26 எழுத்துகளில் தமிழில் தகவல் பரிமாற்ரம் செய்வது புதுமையாக மட்டுமல்ல, மிகவும் எளிதாக இருந்தது . Amma என்று அடித்தால் அம்மா.
அன்றைய டெலிபோன் கட்டணத்தை ஒப்பிட்டால், இந்த பாயின்ட் டு பாயின்ட் டெலிபிரின்டர் கம்யூனிகேஷன் ரொம்பவே வசதியாக இருந்தது.