ADDED : ஏப் 18, 2025 12:52 AM
சென்னை:'தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் வெப்பநிலை வழக்கத்தைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை காணப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மீது வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்குதிசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வரும் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும்; ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 இடங்களில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, மதுரை விமான நிலைய பகுதியில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. ஈரோடு, திருச்சி, வேலுார் ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.