ADDED : அக் 11, 2025 02:00 AM
சிவகாசி:''எங்களது உரிமையை கோருவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம்,'' என, சிவகாசியில் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தங்கள் கூட்டத்தில் மற்ற கட்சிகளின் கொடியை 4 பேர் கொண்டு வந்தால் கூட கூட்டணி வந்து விடும் என்ற நிலைக்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பழனிசாமியின் கரங்களால் அ.தி.மு.க.,விற்கு முடிவுரை எழுதப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். பீகார் தேர்தலை சந்திக்க இண்டியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் காங்., ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன். எங்களது கட்சியை பொறுத்தவரை கூட்டணிக்காக பல தியாகங்களை செய்துள்ளது.
எங்கள் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. எங்களது உரிமையை கோருவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம் என்றார்.