'தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது!'
'தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது!'
ADDED : மார் 05, 2024 06:16 AM

சென்னை : ''தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது. இந்திய அரசியலில், அடுத்த, 60 நாட்கள் முக்கியமானவை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
சென்னை நந்தனத்தில் நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: உலகம் போற்றும் உத்தம தலைவராக, பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இன்று சென்னையில் நம்மை சந்திப்பதற்கு அவர் வந்துள்ளார். பலமுறை அவர் வந்திருந்தாலும், இந்த முறை தன் குடும்பத்தை பார்ப்பதற்கு வந்துள்ளார்; ஆயிரக்கணக்கான தொண்டர்களை சந்தித்து பேச வந்துள்ளார்.
அர்ப்பணிப்பு
'மோடிக்கு குடும்பம் இல்லை; அவர் தனி மனிதர்' என, பீஹாரில் உள்ள லாலு பிரசாத் சொல்கிறார். நாட்டில் உள்ள, 142 கோடி மக்களும் மோடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். நாம் மோடியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பெருமையுடன் சொல்ல வேண்டும்.
ஒரு குடும்பம் தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, லாலு பிரசாத் விரும்புகிறார். தன், 17வது வயதில் வீட்டை விட்டு வந்து, நாடு முழுதும் சுற்றி திரிந்து, ஒரு யோகியாக மோடி வாழ்ந்து வருகிறார்.
தன் வாழ்க்கையை, நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் அர்ப்பணித்து இருக்கிறார்.
கோபாலபுரம் குடும்பம் தமிழகத்தில் வளர்ந்துள்ளது. மாவட்டங்களில் சிற்றரசர்கள் போல, அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் இருக்கின்றனர். நான்காவது தலைமுறையாக, அவர்கள் உள்ளனர்.
அவர்களை அரசியலில் இருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கான வாய்ப்பை, இந்த லோக்சபா தேர்தல் கொடுத்துள்ளது.
கோடிக்கணக்கான மக்களுக்கு, மத்திய அரசு திட்டங்கள் தரப்பட்டுள்ளன. மக்களுக்கு மட்டுமின்றி, வாய் பேச முடியாத ஜீவன்களுக்கும் பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்துகிறார்.
இதனால், சிறுத்தை புலிகள் எண்ணிக்கை, 75 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் 13,874 சிறுத்தை புலிகள் உள்ளன. இதற்காகவே, காஞ்சிபுரம் பட்டில், சிறுத்தை புலியை அச்சிட்டு நெய்யப்பட்ட சால்வையை பிரதமருக்கு போர்த்தியுள்ளோம்.
கிராமத்தில் இருந்தும், நகரத்தில் இருந்தும் வரும் மக்கள், உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்று, மோடி சொல்கிறார்.
அதனால், பனை மர தொழிலாளர்கள் பயன்படுத்தும் பொருட்களை அன்பளிப்பாக பிரதமருக்கு கொடுத்துள்ளோம். இந்திய அரசியலை, அடிப்படையில் இருந்தே மோடி மாற்றியுள்ளார்.
தலையாய கடமை
மோடி வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை. நாடு முழுதும் 400 எம்.பி.,க்களை மோடி பெற்று விடுவார்.
அவ்வாறு பெறும் போது, தமிழகத்தில் இருந்து, 39 எம்.பி.,க்களை அனுப்ப வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது. இதற்கு சபதம் எடுத்துக் கொள்ள இங்கு வந்துள்ளோம்.
'பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என, பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் கூறியுள்ளார். பேய் ஆட்சிக்கு தி.மு.க., அரசு தான் சாட்சி. கொள்ளைக்காரன், மணல் கடத்துபவன், சாராயம் விற்பவன், கஞ்சா விற்பனை செய்பவனுக்கு, இங்கு முதல் மரியாதை தரப்படுகிறது.
முக்கியமானவை
தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது. இந்திய அரசியலில் அடுத்த, 60 நாட்கள் முக்கியமானவை. பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை போட்டு விட்டு வந்துள்ளார்.
இந்தியாவை, உலகத்தின் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைக்க, அவர் தயாராக உள்ளார். தமிழகத்தில் மோடி குடும்பத்தில் இருந்து, எம்.பி.,க்களை அனுப்பி வைப்பது நம் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

