டீ கடை பெஞ்ச்: அறங்காவல் குழு உறுப்பினரின் அடாவடி!
டீ கடை பெஞ்ச்: அறங்காவல் குழு உறுப்பினரின் அடாவடி!
ADDED : மார் 08, 2024 12:17 AM

''ஆளுங்கட்சியினருக்கு மட்டும், 'காமதேனு' கடைகளா மாறுதல் போடுதாங்க வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''டாஸ்மாக் விவகாரமா பா...'' என, பட்டென கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... சேலம் மாவட்டத்தில், 193 டாஸ்மாக் கடைகள்ல, 1,100 ஊழியர்கள் பணிபுரியுதாவ... இவங்க கவுன்சிலிங் நடத்தி, இடமாறுதல் வழங்கணும்னு, அஞ்சு வருஷமா கேட்காவ வே...
''ஆனா, அதை கண்டுக்காத நிர்வாகம், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவங்களுக்கு மட்டும், அதிகமா மது விற்பனை நடக்குற கடைகளுக்கு அடிக்கடி இடமாறுதல் போடுது...
''உதாரணமா, போன ஜனவரியில தாரமங்கலம் கடை சூப்பர்வைசரை, காமலாபுரம் கடைக்கு மாத்தினாவ... ஒரே மாசத்துல, அங்க இருந்து அதை விட அதிகமா விற்பனை நடக்குற அரூர்பட்டி கடைக்கு மாத்திட்டாவ வே...
''கம்மியா விற்பனை நடக்குற கடைகள்ல, எட்டு ஊழியர்களும், அதிகமா விற்பனை நடக்குற கடைகள்ல, மூணு ஊழியர்களும் மட்டும் தான் பணியில இருக்காவ...
''ஆளுங்கட்சி செல்வாக்கு, பணபலம் இல்லாத அப்பாவி ஊழியர்கள், 40 கி.மீ., தள்ளியிருக்கிற விற்பனை குறைவான கடைகளுக்கு தினமும் சிரமப்பட்டு போயிட்டு வர்றாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் ஒரு போதை தகவல் இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்துல, ஆறு மாசமா பணியில இருக்கிற ஒரு ஊழியர், தினமும், 'புல் மப்பு'ல தான் பணிக்கு வர்றாருங்க...
''போதையில, உயர் அதிகாரிகள், சக பெண் ஊழியர்களை தரக் குறைவாகவும், ஆபாசமாகவும் பேசுறாருங்க... சமீபத்துல, மின் கட்டணம் கட்ட வந்த பெண்களை ஆபாசமா திட்டி தீர்த்தாருங்க... அவங்க காதை பொத்தியபடியே, வெளியில ஓடிட்டாங்க...
''அப்புறமா, போதையில தடுமாறி விழுந்தவரை, சக ஊழியர்கள் துாக்கி, ஓரமா படுக்க வச்சிருக்காங்க... இவர் ஆபீசுக்குள்ள நுழைஞ்சாலே, பெண் ஊழியர்கள் பயந்து நடுங்குறாங்க...
''யாராவது கேட்டாலும், 'என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது'ன்னு உதார் விடுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''உதயகுமார், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''நான் ஒண்ணும் சேவை செய்ய வரலன்னு ஓப்பனாவே பேசறார் ஓய்...'' என்றார்.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவையில் இருக்கற பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழுவை சமீபத்துல நியமிச்சிருக்கா... இதுல இருக்கற ஒருத்தர் மட்டும், கோவிலுக்கு சேவை செய்ய வந்தவரா இல்லாம, அரசியல்வாதி போலவே நடந்துக்கறார் ஓய்...
''கோவில்ல, பெண் பக்தர்களுக்கு முன்னாடி வேஷ்டியை மடிச்சு கட்டிண்டு தான் வலம் வரார்... 'மத்தவா நேர்மையா இருந்தாலும், எனக்கு வரவேண்டியது கரெக்டா வந்துடணும்'னு கறார் காட்டறார் ஓய்... 'எனக்கு பிறகு, மாவட்டத்தை கவனிச்சா போதும்'னும் அடாவடி பண்றார்...
''தனக்கு சரிப்பட்டு வராதவளை, ஜாதி பெயரை சொல்லி தான் அழைக்கறார்... இவரை தட்டிக்கேட்ட பெண் அதிகாரி, சமீபத்துல பதவி உயர்வு வந்து வேற கோவிலுக்கு போயிட்டாங்க ஓய்...
''புதுசா வந்த அதிகாரியும், இவரிடம் வம்பு வச்சுக்க விரும்பாம, 'சீக்கிரம் எனக்கும் டிரான்ஸ்பர் தந்துடு மாசாணி தாயே'ன்னு வேண்டிண்டு இருக்காராம் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
''ஸ்.... அப்பா முருகா...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

