சி.பி.ஐ., விசாரணை நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும்: தமிழிசை
சி.பி.ஐ., விசாரணை நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும்: தமிழிசை
ADDED : ஜன 04, 2025 08:26 PM

சென்னை: அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவ . குற்றவாளிகளுக்கு தி.மு.க., அரசு உறுதுணையாக இருப்பதாக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலை சம்பவம் உள்பட தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான பா.ஜ., மகளிர் அணியினர் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: அறிவிக்கப்படாத அவசரநிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவி, இன்னொரு சார் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறியதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்த சாரை ஏன் மறைக்கிறீர்கள். அந்த சார் எங்கே இருக்கிறார். போலீஸ் கமிஷ்னர் சொல்லும், அப்படியொரு சார் எல்லாம் இல்லை என்றார். யாரை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்.
எந்த ஊரைச் சார்ந்தவன் இந்த சார். எந்த இயக்கத்தை சார்ந்தவன் இந்த சார், என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் மனு கொடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
30.8.24ல் 4ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 14.08.24ல் 4 பேர் சேர்ந்து கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். அதில், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 06.08.23ல் வளசரவாக்கத்தில் ஒரு வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அதிலும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளது. அதேபோல, 12.04.23ல் 6 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, 02.01.23ல் நடந்த வன்கொடுமை சம்பவத்திலும், தி.மு.க.,வினருக்கு தொடர்பு. பெண் கான்ஸ்டபிள் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது, அதுவும் இங்கு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல்கலைக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் ஏதோ ஒன்று நடந்திருச்சு, என்பதை கேட்டு செல்ல முடியாது. முதல்வரோ, துணை முதல்வரோ ஏன் குரல் எழுப்பவில்லை. எங்கேயோ ஒரு மாநிலத்தில் நடந்திருந்தால் முதல்வர் குரல் கொடுக்கிறார்.
விசாரணை முடிந்தால் அந்த சார் தெரிந்து விடும் என்று கனிமொழி கூறுகிறார். விசாரணை சரியாக நடக்காது என்பதால் தான் நாங்கள் பயப்படுகிறோம். குற்றவாளிகளுக்கு தி.மு.க., அரசு உறுதுணையாக இருக்கிறது. போராடும் பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள். கைதாக வேண்டிய குற்றவாளிகள் நடமாடுவார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. சி.பி.ஐ., விசாரணை நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும், இவ்வாறு அவர் கூறினார்.