'கரூரில் இடையூறின்றி விசாரணை நடந்தால்தான் உண்மை வெளிவரும்'
'கரூரில் இடையூறின்றி விசாரணை நடந்தால்தான் உண்மை வெளிவரும்'
ADDED : அக் 07, 2025 06:01 AM

பெரம்பலுார் : பெரம்பலுாரில் த.மா.கா., தலைவர் வாசன் அளித்த பேட்டி:
நான்கரை ஆண்டுகளில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை, தி.மு.க., அரசால் ஆறு மாதத்தில் நிறைவேற்ற முடியாது. ஆட்சியை நடத்துவோர் தகுதியற்றவர்களாக உள்ளனர்.
அவர்களை, வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் சட்டசபைத் தேர்தல், தி.மு.க., ஆட்சிக்கு நிச்சயம் முடிவுரை எழுதும்.
கரூரில், விஜய் கூட்டத்தில் 41 பேர் இறந்த சம்பவம் குறித்து, தனி நீதிபதி விசாரணை நடக்கிறது; போலீஸ் உயர் அதிகாரி தலைமையில், மற்றொரு புலனாய்வு விசாரணையும் நடக்கிறது. இந்த விசாரணை நியாயமாக நடப்பதற்கு, தி.மு.க., அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமமானது. அதை, தன் கடமையை செய்ய விட வேண்டும். எதுவும் அறியாமல், நடந்த சம்பவத்துக்கு த.வெ.க., மீது பழிபோடக் கூடாது. அந்த சம்பவத்துக்காக, ஒரு கட்சியை பலிகடா ஆக்கினால், போலீஸ் துறை, ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன செய்தனர் என்ற கேள்வி எழுகிறது.
சம்பவம் நடந்த பின், குழப்பம் விளைவிக்கும் வகையில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பேசி வருகின்றனர்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை, தி.மு.க., தரப்பு உணர வேண்டும். அதிகாரிகளும் ஒருதலைபட்சமாக நடப்பதையும், பேட்டி கொடுப்பதையும் நிறுத்த வேண்டும்.
இடையூறின்றி விசாரணை நடந்தால், கரூர் சம்பவத்தில் உண்மை தானாக வெளிவந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.