sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை; 'டாஸ்மாக்' சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் 'காரம்'

/

அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை; 'டாஸ்மாக்' சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் 'காரம்'

அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை; 'டாஸ்மாக்' சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் 'காரம்'

அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை; 'டாஸ்மாக்' சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் 'காரம்'

87


ADDED : மார் 21, 2025 07:33 AM

Google News

ADDED : மார் 21, 2025 07:33 AM

87


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பண மோசடி வழக்கில், 'டாஸ்மாக்' நிறுவனம் மீது, வரும் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் தொடர வேண்டாம்' என, அமலாக்கத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, மதுக்கடை உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது போன்றவற்றில், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

சட்ட விரோதமானது


இந்நிலையில், 'அமலாக்கத் துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது; மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்.

'விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:

மணல் குவாரி விவகாரத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இதுபோல அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி, மாவட்ட கலெக்டர்களுக்கு, 'சம்மன்' அனுப்பியது.

அந்த சம்மனுக்கு, இந்த நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, மாவட்ட கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்கினர். கூட்டாட்சி கொள்கை, அதிகாரத்தை, அமலாக்கத் துறை தொடர்ந்து மீறி வருகிறது. முன்னர் செய்ததுபோல, டாஸ்மாக் அலுவலக சோதனை குறித்தும், மாநிலத்துக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சோதனை எனக் கூறி, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர், பெண்கள் உள்ளிட்டோரை, மூன்று நாட்கள் நள்ளிரவு வரை சிறை பிடித்து வைத்திருந்தனர். அதை நிரூபிக்க, எங்களிடம் 'சிசிடிவி' காட்சிகள் உள்ளன.

சிறைபிடிப்பு


எந்தவொரு பண மோசடி வழக்கின் நடவடிக்கையிலும், அமலாக்கத் துறைக்கு உதவ, அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மாநில அரசுக்கு தெரியாமல் செயல்பட்டுள்ளனர்.

பெண் அதிகாரிகளை காலை முதல், நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர்.

அதிகாலை 1:00 மணிக்கு சிலரை வெளியில் செல்ல அனுமதித்து விட்டு, காலை 8:00 மணிக்கு திரும்ப வேண்டும் என, அமலாக்கத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் வாதாடினார்.

அப்போது நீதிபதிகள், 'சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, அதை மாநில அரசு எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? மாநில அரசின் அனுமதி பெற்று தான் சோதனை நடத்த வேண்டும் என, மனுவில் கோரப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்ற சட்டம்

'அமலாக்கத் துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பதால், அதை திருத்தம் செய்து, புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள்' என, அரசுக்கு அறிவுறுத்தினர்.

டாஸ்மாக் நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி வாதாடியதாவது:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தை, வெளிப்படையாக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தியதற்கு, இந்த வழக்கு உதாரணம். சோதனை நடத்தும் முன், அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு எந்த தகவலும் தெரிவிக்காமல், பொதுத் துறை அலுவலகத்துக்குள் நுழைந்து, அமலாக்கத் துறை சோதனை நடத்த முடியாது. குற்றம் வாயிலாக பணம் ஈட்டப்பட்டு, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு காரணங்கள் இருக்க வேண்டும்.

பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை, 60 மணி நேரம் வரை, அமலாக்கத் துறை சிறை பிடித்து உள்ளனர். நள்ளிரவிலும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த செயல், தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது. இவ்வாறு அவர் வாதாடினார்.

அப்போது நீதிபதிகள், 'ஒரு நபர் அல்லது ஒரு குழுவினருக்கு எதிராக, அமலாக்கத் துறையிடம் சில தகவல்கள் இருக்கலாம். 'அதற்காக, ஒரு முழு அலுவலகத்தையும், அதிலுள்ள அனைத்து ஊழியர்களையும் தடுத்து நிறுத்த முடியுமா? இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது?' என, அமலாக்கத் துறையிடம் கேள்வி எழுப்பினர்.

வாக்குமூலம்


இதை மறுத்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடியதாவது: சோதனை நடவடிக்கைக்கு முன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சோதனை குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பெண் ஊழியர்கள், நள்ளிரவு வரை காவலில் வைக்கப்படவில்லை.

அரசு குற்றம் சாட்டியதுபோல், இரவில் சோதனை நடத்தப்படவில்லை; ஊழியர்களிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பொய் சொல்ல வேண்டாம்; அனைத்து நடவடிக்கைகளும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன. அமலாக்கத் துறை தன் அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான், நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.

தமிழக அரசின் மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது என்பது குறித்த முழு விபரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us