அதிகாரி வீட்டில் பெண் போலீசுக்கு பணி ஒதுக்கீடு கூடாது; சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., கண்டிப்பு
அதிகாரி வீட்டில் பெண் போலீசுக்கு பணி ஒதுக்கீடு கூடாது; சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., கண்டிப்பு
ADDED : பிப் 14, 2025 02:09 PM

சென்னை: பாலியல் துன்புறுத்தல் புகார் எதிரொலியாக, போலீஸ் உயர் அதிகாரிகளின் இல்லங்களில் (முகாம் அலுவலகம்) பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கக்கூடாது என உயர் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் உயர் அதிகாரிகளின் இல்லங்களில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டெலிபோன் ஆபரேட்டர் போன்ற வேலைகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண் போலீசார் இருவர், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாக, டி.ஜி.பி.,யிடம் சமீபத்தில் புகார் அளித்தனர்.
இத்தகைய புகார்களை தவிர்க்கும் நோக்கில் தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சார்பில் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:
* போலீஸ் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் டெலிபோன் ஆபரேட்டர் பணிகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
* பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், பெண் போலீசார், ஸ்டேஷனில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
* பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை போன்ற வழக்குகளை விசாரிக்க பெண் போலீசார் அவசியம்.
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் தொடர்புடைய பாதிக்கப்பட்டோரிடம் குறைகளை கேட்டு புகார்களை பெறுவதற்கு பெண் போலீசார் ஸ்டேஷனில் இருக்க வேண்டியது அவசியம்.
* இத்தகைய சூழ்நிலையில், முகாம் அலுவலகங்களில் நிர்வாகப்பணிகளில் பெண் போலீசாரை தேவையின்றி வைத்திருத்தல் கூடாது. அதற்கு பதிலாக, அவர்களை போலீஸ் ஸ்டேஷன், சிறப்பு பிரிவுகள் மற்றும் களப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களது திறமை, போலீஸ் துறையில் முழுமையாக பயன்படுத்தப்படும்.
* அனைத்து மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களும் இந்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் அனுப்பிய அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.