'நிபந்தனைக்கு உட்பட்டது' வாசகம் வீடு விற்பனையில் இடம் பெற தடை
'நிபந்தனைக்கு உட்பட்டது' வாசகம் வீடு விற்பனையில் இடம் பெற தடை
ADDED : ஜூலை 30, 2025 06:43 AM

சென்னை: வீடு, மனை விற்பனை தொடர்பான குறிப்பேடுகள், ஆவணங்களில், 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்ற வாசகம் இடம் பெறக்கூடாது என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
விற்பனை நோக்கத்திலான, 5,381 சதுர அடி, அதற்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அந்த குடியிருப்பு திட்டங்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், மக்கள் இந்த ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த புகார்களை விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்க, ஆணையம் உத்தரவிட்டு வருகிறது.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய திட்டங்கள் தொடர்பாக வெளியிடும் விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதில், என்னென்ன விபரங்கள் இடம்பெற வேண்டும் என, வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடு, மனை விற்பனை தொடர்பான குறிப்பேடுகள், ஆவணங்களில் தெரிவிக்கப்படும் சலுகைகள் அருகில், மிக சிறிய எழுத்துகளில், 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்ற வாசகம் இடம் பெறுகிறது.
இந்த வாசகத்தை தவறாக பயன்படுத்தி, சில நிறுவனங்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது.
இதன் அடிப்படையில், வீடு, மனை விற்பனையில், எந்த இடத்திலும், 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்ற வாசகம் இடம் பெறக்கூடாது என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
வீடு, மனை விற்பனையில், மறைமுக கட்டண வசூலை கட்டுப்படுத்தும் நோக்கில், ரியல் எஸ்டேட் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வீடு வாங்கும் மக்களுக்கு, இது பேருதவியாக இருக்கும். இதன் பிறகாவது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளதை உள்ளபடி தெரிவிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.