கேரளா கடவுள் தேசம்...! தமிழகம் என்ன கண்றாவி தேசமா?; சீமான் ஆவேசம்
கேரளா கடவுள் தேசம்...! தமிழகம் என்ன கண்றாவி தேசமா?; சீமான் ஆவேசம்
ADDED : டிச 22, 2024 12:46 PM

திருச்சி: 'கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே?' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், சீமான் கூறியதாவது:
சோதனை சாவடியை தாண்டி கழிவுகள் எவ்வாறு வருகிறது. கேரளாவின் மருத்துவக் கழிவுகள் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. என்னுடைய வளங்களை வெட்டி எடுத்து சென்று அவர்களின் குப்பைகளை இங்கே கொட்டுகின்றனர். கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே? இதை கேட்டு தடுத்திருக்க வேண்டியது யார்?
கழிப்பிடம், குடியிருக்கும் இடத்தை தவிர மீதமுள்ள அனைத்திற்கும் கருணாநிதி பெயர் தான் வைக்கப்பட்டு உள்ளது. வேறு தகுதி பெற்ற தலைவர் யாரும் இல்லையா? பா.ஜ.,விற்கு என்ன கொள்கை இருக்கிறது? பா.ஜ.,விற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
எனது எதிரிகள்
தி.மு.க.,தான் பா.ஜ.,வின் ஏ டீம் என்பதால் என்னை பி டீம் என்கிறார்கள். அ.திமு.க.,வை கண்டு கூட தி.மு.க., பயப்படுவதில்லை. என்னை பார்த்து தான் பயப்படுகிறது. இதுவரை இருந்ததிலேயே மிக மோசமான முதல்வர் ஸ்டாலின் தான். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். பணம் கொடுத்தால் தான் தி.மு.க.,வினர் வேலை செய்வார்கள். என்னை எதிர்க்கும் அனைவரும் எனது எதிரிகள் அல்ல.
இவ்வாறு சீமான் கூறினார்.
ஆவலாக இருக்குறேன்!
தி.மு.க., சாதனைகளை போர்ப்பரணி பாட வேண்டும் என செயற்குழுவில் கூறியுள்ளனர் என நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, ' தி.மு.க., பாடவிருக்கும் போர்ப் பரணியை கேட்க ஆவலாக இருக்கிறேன். சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்னை உள்ள நிலையில் அவர்கள் போர்ப்பரணியை கேட்க ஆவலாக உள்ளேன்' என சீமான் பதில் அளித்தார்.