தேனி இரட்டை கொலை வழக்கு; குற்றவாளியின் துாக்கு ரத்து
தேனி இரட்டை கொலை வழக்கு; குற்றவாளியின் துாக்கு ரத்து
UPDATED : ஜூலை 16, 2025 04:41 AM
ADDED : ஜூலை 15, 2025 11:50 PM

தேனி இரட்டை கொலை வழக்கில், குற்றறம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே பிரபல சுற்றுலா தலமான சுருளி அருவி உள்ளது. இதன் அருகே, 2011ல், காதலர்களான கஸ்துாரி, எழில் முதல்வன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
கைது செய்தனர்
இந்த வழக்கை விசாரித்த போலீசார், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளையை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலர்கள் இருவரும் காட்டுக்குள் தனிமையில் இருந்த போது கட்டவெள்ளை, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும், பின்னர் கஸ்துாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதும், அதை தடுக்க முயன்ற எழில் முதல்வனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.
கஸ்துாரியை பாலியல் வன்கொடுமை செய்து, பின், அவரையும் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு கட்டவெள்ளை தப்பி ஓடியதும் தெரியவந்தது.
எட்டு ஆண்டுகளாக தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், கட்டவெள்ளையை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக கட்டவெள்ளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், 2019ல், துாக்கு தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கட்டவெள்ளை மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, 77 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியது.
இதில், திவாகர் என்ற கட்டவெள்ளையை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிப்பதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நிரூபிக்கவில்லை
தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் குறிப்பிட்டுஉள்ளதாவது:
இந்த கொலை விவகாரத்தில் கண்ணால் பார்த்த நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத சூழலில், மற்ற சாட்சிகளின் உண்மை தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறிவிட்டது.
மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து இருந்து எடுக்கப்பட்ட விந்தணுவும், குற்றவாளி என சொல்லப்பட்ட நபரிடமிருந்து சேகரிக்கப்பட்ட விந்தணுவும் பரிசோதிக்கப்பட்டதில் முரண்பாடு இருப்பதை பார்க்க முடிகிறது. இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

