வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களின் ஆவணங்களை சரிபார்க்க கால தாமதமாகிறது
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களின் ஆவணங்களை சரிபார்க்க கால தாமதமாகிறது
ADDED : டிச 17, 2025 06:25 AM

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, தற்காலிக சான்றிதழ் வழங்குவதில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது என புகார் எழுந்தது. இதை கண்டித்து, 'ஜன., 6ம் தேதி, சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க, வெளிநாட்டுப் பிரிவு அறிவித்தது.
இதற்கு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள விளக்கம்: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு, தேசிய தேர்வு வாரிய தேர்ச்சி சான்றிதழுடன், கடவுச்சீட்டு பதிவுகளை சரி பார்த்து, பல்கலையின் நேரடி ஒப்புதல் பெற்று, துாதரகம் வாயிலாக சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டின் துாதரகமும், ஆவண சரிபார்ப்பை உறுதி செய்து அனுப்ப, ஓரிரு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன. இந்த சரிபார்ப்பின்போது, போலி சான்றிதழ் இணைத்து, மாணவர்கள் பதிவு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கூட, தேர்ச்சி ஆவணங்களில் போலி சான்றிதழை, இரண்டு மாணவர்கள் இணைத்திருந்தது கண்டறியப்பட்டது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு, தகுதி சான்றிதழ் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்குவது மட்டுமே, மருத்துவ கவுன்சில் பணி.
கொரோனா காலத்திலும், போர் காரணங்களாலும், 'ஆன்லைன்' வாயிலாக படித்து, தேர்வு எழுதிய மாணவர்கள், போதிய பயிற்சி பெற, கட்டாய சுழற்சி முறை, மருத்துவ பயிற்சிக்கான வரைமுறைகளையும், கால அளவையும் தேசிய மருத்துவ கமிஷன் நிர்ணயித்துள்ளது.
தேசிய மருத்துவ கமிஷன் வழங்கிய, 7.5 சதவீத ஒதுக்கீடு வாயிலாக, மாணவர்களுக்கு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் இடங்கள் வழங்கப்படுகின்றன. இதில், இன்னும் காலி இடங்கள் இல்லை.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க, போலி டாக்டர்களை கண்டறிந்து, பொறுப்புடன் பணியாற்றி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

