புத்துணர்வு முகாமிற்கு தெய்வானை யானையை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை
புத்துணர்வு முகாமிற்கு தெய்வானை யானையை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை
ADDED : நவ 20, 2024 06:57 AM

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெய்வானை யானை தாக்கியதில், திருச்செந்துாரை சேர்ந்த பாகன் உதயகுமார், 46, அவரது உறவினரான களியக்காவிளையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிசுபாலன், 54, ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.
யானை முன் நின்று நீண்ட நேரமாக செல்பி எடுத்ததால், ஆக்ரோஷமடைந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, 'இயற்கைக்கு மாறான மரணம்' என, திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
கால்நடை பாராமரிப்புத் துறை உதவி இயக்குநர் செல்வகுமார் யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி, முதுமலை, டாப்ஸ்லிப் ஆகிய பகுதிகளில் உள்ள யானைகள் மறுவாழ்வு மற்றும் புத்துணர்வு பயிற்சி மையத்திற்கு அனுப்புவது குறித்து கோவில் நிர்வாகமும், வனத்துறையும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தவிக்கும் யானை
மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் கூறுகையில், “யானையை புத்துணர்வு முகாமிற்கு அழைத்து செல்வதற்காக எந்த திட்டமும் தற்போது வரை இல்லை,” என்றார். இருவரை கொன்ற யானை, கடந்த இரண்டு நாட்களாக சோகத்தில் தவிக்கிறது.
தடை
நெல்லை காந்திமதி அம்மன் கோவில் வடக்கு பிரகாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள காந்திமதி, 55, யானைக்கு அருகில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பக்தர்களிடம் நேரடியாக தேங்காய், பழங்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
![]() |