நில எடுப்பில் தெளிவான முடிவில்லை; மரகத பூஞ்சோலை திட்டம் தடுமாற்றம்!
நில எடுப்பில் தெளிவான முடிவில்லை; மரகத பூஞ்சோலை திட்டம் தடுமாற்றம்!
ADDED : நவ 16, 2024 11:09 AM

சென்னை: நிலம் தேடுவது, எல்லை பிரச்னை ஆகியவை காரணமாக, கிராம மரகத பூஞ்சோலை திட்டம், சில மாவட்டங்களில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து, பிரச்னைக்கு தீர்வு காண, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பளவை, 33 சதவீதமாக உயர்த்த, வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காலி நிலங்களில் மரங்களை வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும், வனத்துறை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கிராமங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு, 2022ல் அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், '100 கிராமங்களில் தலா, 2.47 ஏக்கர் பரப்பளவில், மரகத பூஞ்சோலை அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இதற்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கிராமங்களில், நீர் நிலையை ஒட்டிய பகுதியில், 2.47 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, அதில், மூலிகை மற்றும் உள்ளூர் பயன்பாட்டுக்கான மரங்களை நட்டு வளர்க்க அறிவுறுத்தப்பட்டது.
இதில் கிடைக்கும் பயன்களை, அந்தந்த கிராம மக்களே பெறும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில், 2.47 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். பெரும்பாலான பகுதிகளில், எந்த நிலத்தை இதற்கு ஒதுக்குவது என்பதில், ஊராட்சி நிர்வாகங்கள் தெளிவான முடிவு எடுக்காமல் உள்ளன. வனத்துறை அல்லது வருவாய் துறை நிலம் கொடுத்தால், இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என, ஊராட்சிகள் நினைப்பதால், இத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே, தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, ஆக., 14ல் அரியலுார் மாவட்டத்தில், இரண்டு கிராமங்களில், கிராம மரகத பூஞ்சோலை திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில், இத்திட்டம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே தடுமாறுவது தெரிய வந்துள்ளது.
அனுமதி
கிருஷ்ணகிரி, திருச்சி, தர்மபுரி, புதுக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளில், நிலம் தேர்வு செய்யும் பணிகள், வெற்றிகரமாக முடிக்கப்பட்டாலும், பிற மாவட்டங்களில், நிலம் தேர்வு நிலையிலேயே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. காப்பு காடுகள் உள்ள பகுதிகளில், அதை ஒட்டிய காலி நிலங்களை, மரகத பூஞ்சோலை திட்டத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கிறோம்.
பிற பகுதிகளில் இதற்கான நிலத்தை, அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகம், மக்கள் பங்களிப்புடன் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு ஊரக வளர்ச்சி, வருவாய் துறையின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எந்தெந்த கிராமங்களில் நிலம் தேர்வு செய்வதில் பிரச்னை உள்ளது என்பதை விசாரித்து வருகிறோம். இது குறித்து மாவட்ட அளவில் உள்ள, பிற துறை அதிகாரிகளுடன் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.