'சரியான நேரத்தில் நோய் கண்டறிய தெளிவான வழிகாட்டுதல் இல்லை'
'சரியான நேரத்தில் நோய் கண்டறிய தெளிவான வழிகாட்டுதல் இல்லை'
UPDATED : செப் 19, 2024 02:27 AM
ADDED : செப் 19, 2024 02:08 AM

மதுரை:''நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தின் மூலம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகளின் பாதுகாப்பில் முன்னிலையில் இருக்கும்,'' என, மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸில் சிகிச்சையின் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து, மதுரை எய்ம்ஸ் ஆராய்ச்சி ஆலோசனை கவுன்சில் தலைவர் டாக்டர் ரவிக்குமாருடன் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் ஆலோசனை செய்தார்.
டாக்டர் ரவிகுமார் உலக சுகாதார நிறுவனத்தில் நோயாளி பாதுகாப்பு பாடத்திட்டக்குழுவில் பணியாற்றியவர். அவர் கூறியதாவது:
சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது என்பது நோயாளியின் பாதுகாப்பில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
சரியான நோய்க்கு பதிலாக கவனக்குறைவாக தவறான விதத்தில் சிகிச்சை அளித்தால் நோயாளிக்கு உடல், மனரீதியாக, பொருளாதார ரீதியாக துன்பத்தை அதிகப்படுத்தி விடும். அறிவு, அனுபவம், திறமையைப் பொறுத்து நோயை கண்டறிதல் முறை மாறுபடுகிறது.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மருத்துவ சேவை வழங்குபவர்களால் நோயாளிகளின் நோய் குறித்த தன்மையை ஆய்வு செய்வதில் பிழைகள் ஏற்படலாம். நோய் கண்டறியும் கால அவகாசமும் மாறுபடலாம். சரியான நேரத்தில் நோயை கண்டறிவதற்கான தெளிவான வழிகாட்டுதல் நம்மிடம் இல்லை. தாமதமான பரிசோதனையும், தவறான கண்டறிதலும் நோயாளிக்கு தீங்கை ஏற்படுத்தும்.
மதுரை எய்ம்ஸின் மருத்துவச் செயல்பாடுகள் ஆரம்ப நிலையில் உள்ளது. மருத்துவப் பராமரிப்புத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டுமின்றி நர்சிங் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கும் முதல் நாளிலிருந்தே அறிவுறுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக ஒவ்வொரு ஒருங்கிணைந்த கற்பித்தல் பாடத்தொகுப்பிலும் நோயாளிகளின் பாதுகாப்பு கூறுகளை உருவாக்க நிர்வாக இயக்குநருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன் என்றார்.
நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் கூறுகையில், ''எய்ம்ஸ் மதுரை இணையதளத்தில் நோய் கண்டறிதல் பாதுகாப்பிற்கான பயிற்சி திட்டம், பாடத்திட்டம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.
பாடத்திட்டத்தில் நோயாளிகளின் பாதுகாப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் இந்த முறையானது. நோயாளிகளின் பாதுகாப்பில் எய்ம்ஸ் மதுரையை முன்னிலையில் வைத்திருக்கும்,'' என்றார்.

