'நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை'
'நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை'
ADDED : மார் 22, 2025 01:57 AM

சென்னை: ''நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை என்ற வகையில், மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை: மருத்துவத் துறையில் இந்தியாவின் தலைமையிடமாக தமிழகம் விளங்குகிறது. ஆனால், எங்கு பார்த்தாலும் சொறிநாய், வெறிநாய் கடிக்கின்றன. இதற்கு, அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் இருப்பு இருக்கிறதா? நாய் கடித்தால் எத்தனை மணி நேரத்திற்குள் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
அமைச்சர் சுப்பிரமணியன்: ஆரம்ப சுகாதார மையங்கள் கிராமங்களில் அமைந்துள்ளன. அவற்றில் நாய் கடிக்கு மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. தி.மு.க., அரசு அமைந்ததும், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, ஏ.எஸ்.வி., என்ற பாம்புக்கடி மருந்தும், ஏ.ஆர்.வி., என்ற நாய்க்கடி மருந்தும், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இரண்டரை ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை என்ற வகையில் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது.
வி.சி., - சிந்தனை செல்வன்: இரவில் பெண் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு காவலர்கள் நியமிக்கப்படுவரா?
அமைச்சர் சுப்பிரமணியன்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் காவலர் பணியிடங்கள் இல்லை. எதிர்காலத்தில் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் துாய்மை, காவல், நிர்வாகம் போன்ற பணிகளை நிரந்தரமற்ற பணியாளர்கள் செய்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டு, சென்னையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாதுகாப்பான கட்டமைப்புடன் செயல்படுகின்றன.
இவ்வாறு விவாதம் நடந்தது.