'அரசு, கவர்னர் இடையே எந்த பிரச்னையும் இல்லை': அமைச்சர் ராஜ கண்ணப்பன்
'அரசு, கவர்னர் இடையே எந்த பிரச்னையும் இல்லை': அமைச்சர் ராஜ கண்ணப்பன்
ADDED : பிப் 06, 2024 02:34 AM

சென்னை: ''அரசுக்கும், கவர்னருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சென்னை அண்ணா பல்கலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின். அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசில் நிதி பற்றாக்குறை உள்ளது. அரசின் வருவாயில், 24 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு போய்விடுகிறது. பேரிடர் போன்ற சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனாலும், உயர்கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உதவி பேராசிரியர் பணியில், 4,000 பேரை, ஆசிரியர்தேர்வு வாரியம் வழியேநியமிக்க உள்ளோம்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 25 இன்ஜினியரிங் கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை குறைவால் மூட விண்ணப்பித்து உள்ளன. அதற்கு ஒப்புதல் அளித்துவருகிறோம்.
கவர்னருக்கும், அரசுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இம்மாதம் சட்டசபை கூட்டத்துக்கு வர, அவர் சம்மதித்துள்ளார். நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்; அவர் அவரது வேலையை பார்க்கிறார்.
அண்ணா துரை நினைவு நாள் நிகழ்ச்சிகள் இருந்ததால், கவர்னர் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், என்னால் பங்கேற்க முடியவில்லை.
தேசிய கல்வி கொள்கையில் நல்லஅம்சங்கள் இருந்தால், அதை ஏற்றுக்கொள்வோம். மாநில கல்வி கொள்கை அறிக்கை குறித்து, முதல்வர் முடிவுஎடுப்பார். தமிழக பல்கலைகளில், தமிழகத்தை சேர்ந்த துணைவேந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

