ADDED : அக் 06, 2025 01:15 AM

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசலில், அ.ம.மு.க., சார்பில், நன்னிலம் சட்டசபை தொகுதி தொடர்பான உள்ளிருப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேசியதாவது:
ஆட்சி, அதிகாரத்தை, நம்மால் பெற்ற பழனிசாமி, அ.தி.மு.க.,வில் இருந்து நம்மை வெளியேற்றிய பின், அதிகாரத்தை துாக்கி எறிந்துவிட்டு, லட்சக்கணக்கான தொண்டர்கள் என்னுடன் வந்தனர். கடந்த, 2017ல், ஜெயலலிதாவை கொலை செய்து விட்டனர் என, பொய் பிரசாரம் தமிழகம் முழுதும் வைக்கப்பட்டது.
இதை முறியடித்து வெற்றிபெற்ற இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். சிலரை கையில் வைத்து, பழனிசாமி நமக்கு துரோகம் செய்தார்.
ஆனாலும், பழனிசாமி அவர்களை விட்டு வெளியேறியபோது, அவரால் வெளியேற்றப்பட்டோரோடு மட்டும் அ.ம.மு.க., கூட்டணி ஏற்படுத்தினோம். அக்கட்சிக்கு நம்மால் பலன் கிடைத்தது. ஆனால், அவர்கள் மீண்டும் பழனிசாமியுடன் சேர்ந்து, நம்மை ஓரங்கட்டினர்.
பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக சித்தரித்ததும், அதை ஏற்க மறுத்து விட்டோம். கூட்டணியில் இருந்தும் வெளியேறி விட்டோம்.
இந்த தேர்தலோடு, பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையை முடித்தாக வேண்டும் என்ற மனநிலையில் அனைவரும் உள்ளனர்; அதே வேகத்தோடு தேர்தல் பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலில், பழனிசாமியை வீழ்த்தாமல் விடக்கூடாது; துரோகத்தின் முழு அடையாளமாக இருக்கும் பழனிசாமியை, ஊருக்கு அடையாளம் காட்டி, அவரை முழுதுமாக வீழ்த்த வேண்டும். அதுவரை கட்சியினர் யாரும் உறங்கக்கூடாது.
வரும் தேர்தலில், அதிக இடங்களில் அ.ம.மு.க., போட்டியிட்டு, 80 முதல் 90 சதவீதம் வரை வெற்றி பெறுவோம்.
இவ்வாறு பேசினார்.