ADDED : ஏப் 24, 2025 05:16 AM

சென்னை: தற்காலிக பயிற்சி மையத்திற்கான வாடகை மற்றும் பயிற்றுநர்களுக்கு தருவதற்கான நிதியை, அரசு தராமல் காலம் தாழ்த்துவதாக, தீயணைப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, தீயணைப்பு துறைக்கு, 674 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்தாண்டு, டிச., 27ல், பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
அவர்களுடன், காவல், சிறை துறைக்கு தேர்வானவர்களுக்கு அடிப்படை பயிற்சி முன்கூட்டியே துவக்கப்பட்டது.
ஆனால், நிதி ஒதுக்கீடு மற்றும் உள் கட்டமைப்பு வசதி இல்லாததால், தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஏப்., 2ல் இருந்து தான் பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளன.
சென்னை தாம்பரத்தில் உள்ள தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில், 100 பேரை மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்க முடியும். அதனால், பள்ளி, கல்லுாரிகள் என, ஆறு இடங்களில் தற்காலிக பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
அதற்கான வாடகை தொகை, பயிற்றுநர் படி எவ்வளவு என்பது குறித்து, தீயணைப்பு துறை டி.ஜி.பி.,யாக இருந்த ஆபாஷ்குமார், கடந்தாண்டு டிச., 26ல் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
அதில், 'மூன்று மாதங்களுக்கும், ஆறு பயிற்சி மையத்திற்கான வாடகை, பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அடிப்படை ஊதியத்தில், 7.5 சதவீதம் தர வேண்டும். இதற்கு, 59.90 லட்சம் ரூபாய் தேவை' என்று, கூறியிருந்தார். ஆனால், எந்த நிதியும் இதுவரை வரவில்லை. அதனால், வாடகை தரக்கூட வழியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.