பார்லிமென்டில் மென்மை கூடாது; கடுமையாக பேசணும்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை
பார்லிமென்டில் மென்மை கூடாது; கடுமையாக பேசணும்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : நவ 22, 2024 08:46 PM

சென்னை: லோக்சபா தேர்தலை விட 2026 சட்டசபை தேர்தல் பல மடங்கு முக்கியமானது எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், பார்லிமென்டில் எம்.பி.,க்கள் மென்மையாக பேசக்கூடாது. கடுமையாக பேச வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
வரும் 25ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இதனையடுத்து சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் நிதி உரிமை, தேவைகள் நிதி நெருக்கடி குறித்து பார்லிமென்டில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வருவதில்லை என்பதை வலியுறுத்துவதுடன் புதிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.
பார்லிமென்டில் மென்மையாக பேசக்கூடாது. கடுமையாக பேச வேண்டும். தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் பா.ஜ., கவனமாக இருக்கிறது. இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. லோக்சபா தேர்தலை விட சட்டசபை தேர்தல் பல மடங்கு முக்கியமானது. ஒரு தொகுதியை கூட இழக்கக்கூடாது தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாக பயன்படுத்துங்கள்.
லோக்சபா தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற எம்.பி.,க்கள் முழு பங்களிப்பு முக்கியம். எம்.பி.,க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால் நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும்.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செயல்பாடுகளை அறிக்கையாக தர வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தீர்மானம்
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;
*மாநில உரிமை நிதி உரிமை காக்க பார்லிமென்டில் முழங்குவோம்.
*மதுரை எய்ம்ஸ் பேரிடர் நிதி வரிப் பகிர்வு உள்ளிட்ட விகாரம் குறித்து குரல் எழுப்புவோம்.
*தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது.
*வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவோம்.
*ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்ப்பு.
*தமிழகம் தமிழ் மக்களை வஞ்சிக்கும் பா,ஜ., அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோம்.
*சமக்ர சிக்ஷா நிதி ஜி.எஸ்.டி., வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.