UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 09:50 PM
சென்னை: கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், இன்று (நவ.28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை: தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 13 செ.மீ., மழை பெய்துள்ளது. லட்சத்தீவின் தெற்கு பகுதிகளில் இருந்து, மத்திய கிழக்கு அரபிக் கடல் வழியாக, கடலோர கர்நாடகா வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக் கடலில், வரும், 30 வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று, இடி மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். திருப்பூர், கடலுார், திருச்சி, அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில், இன்று இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
