இன்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
இன்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
ADDED : அக் 09, 2025 05:00 PM

சென்னை: தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, வி.ஏ.ஓ.,க்கள் இருவர் என மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், சிவசுப்ரமணியம் என்பவர் தனது மனைவி பெயரில் இருந்த தற்காலிக மின் இணைப்பை மாற்றக் கோரி, விண்ணப்பித்து இருந்தார். இதனை செய்து கொடுக்க வடக்கு வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், 56, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனைக் கொடுக்க விரும்பாத சிவசுப்ரமணியம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில், சிவசுப்ரமணியம் ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தை மின்வாரிய அதிகாரி ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதிகாரி ஜெயக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது அலுவலகத்தில் கணக்கில் வராத 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கிராம நிர்வாக அதிகாரி கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கூட்டு பட்டாவை பிரித்து தனிப்பட்டா வழங்க ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய பெரியூர் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) ராஜ்குமாரை, 41, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வரிக்கல் விஏஓ தேவராஜ், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.