மக்களுக்கு தேவையான திட்டங்கள் என்று சொல்லி அவர்கள் தான் ஆதாயம் அடைகின்றனர்
மக்களுக்கு தேவையான திட்டங்கள் என்று சொல்லி அவர்கள் தான் ஆதாயம் அடைகின்றனர்
ADDED : ஜன 30, 2024 01:40 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: மக்களுக்கு தேவையான திட்டங்களை துவக்குகிறோம் என்ற பெயரில், திட்டங்களை துவக்கி விட்டு, அதில் அவர்கள் தான் ஆதாயம் அடைகின்றனரே தவிர, மக்கள் ஆதாயம் அடைவதில்லை. ஜல்லிக்கட்டு, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் போன்ற திட்டங்களை முழுமையாக முடிக்காமல், அவர்கள் ஆதாயத்திற்காக அவசர கதியில் துவக்கியதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தொடர்ந்து, 10 வருஷம் ஆட்சியில் இருந்தப்ப இவங்க என்னென்ன ஆதாயம் அடைந்தாங்கன்னு தி.மு.க.,வினர் பட்டியல் போட்டா இவர் என்ன
செய்வார்?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பல்லடத்தில் நடுத்தெருவில் ஒரு ஊடகவியலாளரை வெட்டிக் கொல்ல முயல்கிறது ஒரு கும்பல். சிவகங்கை மாவட்டத்தில் நடு இரவில் துாங்கிக் கொண்டிருப்போரை வெட்டி கொள்ளை யடித்து செல்கிறது மற்றொரு கும்பல். தமிழகத்தின் சட்டம் -- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆனால், தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும், சாதனை புரிந்து விட்டதாக மார் தட்டிக் கொள்வது கொடுமையிலும் கொடுமை.
‛பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இப்படி எந்த சம்பவங்களும் நடக்கலையா'ன்னு தி.மு.க., கூட்டணி கட்சிகள் கேட்டாலும் கேட்பாங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், ஏழு மாதங்களில் மின் வாரியத்திற்கு, 23,863 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. ஆனாலும், மின் வாரியத்தின் நஷ்டம் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் மின் வாரியத்தை காப்பாற்ற உடனடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அதெல்லாம் ஒரு திருத்தமும் செய்ய மாட்டாங்க... வேணும்னா நஷ்டத்தை சமாளிக்க, சத்த மில்லாமல் மின் கட்டணத்தை புதுப்புது ரூட்டுல ஏத்துவாங்க பாருங்க!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என, தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். கோடநாடு கொலை நடந்த சமயத்தில் பழனிசாமி ஆட்சி தான் இருந்தது. இவ்வழக்கில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். காவல் துறை அதை மீறி முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறை நன்றாக செயல்பட்டு வருகிறது.
காவல் துறைக்கும், தமிழக அரசுக்கும் இவர், ‛வெரி குட்' சொல்றதை பார்த்தால், அவங்க சேர்த்துக்கிட்டா தி.மு.க., கூட்டணிக்கு கூட போவார் போலிருக்கே!