அப்பன் வீட்டு சொத்தை விற்றா ரூ.5,000 கொடுத்தனர்: சீமான்
அப்பன் வீட்டு சொத்தை விற்றா ரூ.5,000 கொடுத்தனர்: சீமான்
ADDED : மார் 11, 2026 06:39 AM

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை, காட்டங்கொளத்துாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
மலை, காடுகளை உருவாக்க முடியாதபோது, அடிப்படை அறிவில்லாதவர்களிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு, அவற்றை அழித்து வருகின்றனர். படிப்பவர்களுக்கு அரசியலை விட சிறந்த கல்வி ஒன்றும் இல்லை; அரசியல் படிப்பதும் பேசுவதும் அவசியம்.
இலவசத்தை அறிவிப்பது கேடுகெட்ட ஆட்சிமுறை. ஆள் மாற்றம் தான் நடக்கிறது; ஆனால், ஆட்சி முறை மாறவில்லை. எந்த கட்சி வந்தாலும், சாராயம், பாலியல் கொடுமை, லஞ்சம், ஊழல், கொள்ளை, கொலை என எதுவும் மாறவில்லை.
ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் முதலீடு செய்து, லாபம் பார்க்கின்றனர். பணம் வாங்கிய மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஓட்டுக்கு பணம் வாங்கும் இடத்தில், ஜனநாயகம் செத்து விடுகிறது.
மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் தி.மு.க., 5,000 ரூபாய் கொடுத்தது, அது அப்பன் அல்லது பரம்பரை சொத்துக்களை விற்பனை செய்து கொடுத்த பணமா? அந்த பணத்தை எங்கிருந்து எடுத்தனர் என்பதை சிந்தித்தால் மட்டுமே மாற்றம் நிகழும்.
நீங்கள் பட்டினி கிடந்து இறந்தால், கட்டையில் எரிக்காமல் மின்சாரத்தில் எரிப்பது தான் வளர்ச்சியாக உள்ளது. ஆன்லைனில் பிச்சை எடுப்பது தான் வளர்ச்சியாக உள்ளது. பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்கவில்லை.
இங்கே மக்கள் அரசியல் இல்லை; விளம்பர அரசியல் தான் உள்ளது. தேர்தல் வரும்போது தான், மக்கள் மீது 2,000, 3,000 ரூபாய் என்ற பாசம் வந்து விடுகிறது. கூட்டணி அமைத்தும் ஓட்டுக்கு பணம் தருகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லாட்சி தர வேண்டும்.
கொள்கை இல்லாத அரசியல், பாவம். உங்களுக்கான தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேடாமல் போராட்ட களத்தில் தேடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

