திருமாவளவன், சீமான் 'நோ' சொன்னப்பிறகே எங்கள் பக்கம் வந்தார் இபிஎஸ்: அன்புமணி பேச்சு
திருமாவளவன், சீமான் 'நோ' சொன்னப்பிறகே எங்கள் பக்கம் வந்தார் இபிஎஸ்: அன்புமணி பேச்சு
ADDED : மார் 27, 2024 03:32 PM

சென்னை: ''அதிமுக கூட்டணியில் சேரும்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், சீமானை இபிஎஸ் அழைத்து வந்தார். அவர்கள் வரவில்லை என்றதும் எங்களிடம் வந்தார்'' என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அக்கட்சி தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது மிகுந்த மரியாதை உண்டு. பாமக.,வுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தோம், அவர்கள் கூட்டணிக்கு வரவில்லை என அவர் சொல்லியிருக்கிறார்.
2019ல் அவர்களுக்கு நாங்கள் ஆட்சியை கொடுத்தோம்; நாங்கள் இல்லையென்றால், அவர்களால் ஆட்சியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவியது. அதன்பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம்.
2021 தேர்தலில் எங்களால் தான் அவர்கள் 66 இடங்களில் வென்றனர், இல்லையெனில் 36 இடங்கள் தான் வெற்றிப்பெற்றிருப்பார்கள். அதேநேரத்தில் நாங்கள் 15 இடங்களில் வென்றிருக்க வேண்டும். அதிமுக.,வினர் ஓட்டளிக்காததால் பா.ம.க பல இடங்களில் தோற்றது. கடந்த 6 மாதமாக இபிஎஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அழைத்தார்.
எத்தனையோ முறை, திருமாவளவனை எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என இபிஎஸ் அழைத்து வந்தார். அதேபோல், சீமானிடமும் கேட்டார். யாரும் வரவில்லை; அதன்பிறகே, எங்களிடம் வந்தார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி எவ்வளவோ சொல்லலாம்; ஆனால் அதற்குள் போக விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

