ADDED : ஏப் 15, 2025 12:53 AM

சென்னை: “ஆணவ கொலைகளை தடுக்க, தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்,” என, முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அவரது பிறந்த நாளையொட்டி, வி.சி., தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
அம்பேத்கர் பிறந்த நாளை, 2020ல் இருந்து வி.சி., அனைத்து உலக சமத்துவ நாளாக அறிவித்தது. அன்றைய தினம், 'ஜாதியை ஒழித்து, சமத்துவம் படைப்போம்' என, உறுதிமொழி ஏற்று வருகிறோம். கடந்த 2022லிருந்து, ஏப்., 14ஐ சமத்துவ நாளாக அறிவித்து, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.
இந்தியாவிலேயே, தமிழக அரசுதான் இந்நாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. ஆணவ கொலைகளை தடுக்க, தனி சட்டம் இயற்ற வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இது தொடர்பாக முதல்வருக்கு சமத்துவ நாளில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். முதல்வர் இந்த கோரிக்கையை பரிசீலித்து, சட்டம் இயற்றி, பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.