கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை: திமுக கூட்டணியில் திருமாவின் திருவிளையாடல்
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை: திமுக கூட்டணியில் திருமாவின் திருவிளையாடல்
ADDED : செப் 25, 2024 02:56 PM

சென்னை: ‛‛கூட்டணியில் இருக்கணும், ஆனா இருக்கக் கூடாது'' என்ற ரீதியில் செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் திருவிளையாட்டு எந்த அளவுக்கு எடுபடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‛‛கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டும்'' என்று கொளுத்திப் போட்டு திமுக கூட்டணியில் முதன்முதலில் புகைச்சலை ஏற்படுத்தினார் திருமா. அதைத் தொடர்ந்து அவரை முதல்வர் ஸ்டாலின் அழைத்துப் பேசியதும், தனது கருத்தில் இருந்து ஜகா வாங்கினார்.
ஆனால் தனது தம்பிகளுக்கு வேறு அறிவுரைகளை வழங்கி விட்டோரோ என்று எண்ணும் வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என்று கோவையில் வி.சி., தம்பிகள் போஸ்டர் ஒட்டினர். இதற்கு திருமா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. கோவை தம்பிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கோவை தம்பிகளின் கருத்து, திருமாவின் மறைமுக கருத்து தான் என்று திமுகவினர் நம்ப துவங்கினர்.
புகைச்சல் ஓரளவு தணிந்துவிட்டதோ என்று திமுகவின் மற்ற கூட்டணி கட்சியினர் நினைத்துக்கொண்டு இருக்க, மீண்டும் இன்னொரு வெடியை கொளுத்திப் போட்டார் வி.சி., துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. ஒரு கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு கூட்டணியின் மற்ற கட்சிகளின் பங்கு இருக்கும்போது, அதிகாரத்தில் ஏன் பங்கு தரக் கூடாது. ஆந்திராவில் சந்திரபாபு அப்படி பங்கு கொடுத்திருக்கிறாரே என்று ஆதவ் கேள்வி எழுப்பினார்.
இதனால் எரிச்சல் அடைந்த திமுகவை லேசாக சமாதானப்படுத்துவதற்கு வி.சி., எம்பி ரவிக்குமாரை ஒரு அறிக்கை விட வைத்து, அதில் ஆதவை கண்டிப்பது போல் கண்டிக்க வைத்தார் திருமா. ‛‛ஆதவை கண்டிக்காவிட்டால் அடுத்த முறை சீட் வாங்குவதற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது'' என்று ரவிக்குமார் பதறுகிறார்.
இதை எல்லாம் மற்ற கூட்டணி கட்சிகள் ஆர்வத்துடன் கவனித்து வந்தன. வி.சி.,க்கு ஏதாவது அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் தாங்களும் அதை வைத்து பங்கு கேட்கலாமே என்பது அக்கட்சிகளின் எண்ணம்.
இந்நிலையில் இன்று (செப். 25) பேட்டி அளித்த திருமா, திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் எழாது. ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்'' என்று திமுகவுக்கு வலிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இது பற்றி அரசியல் நிபுணர்கள் கூறும்போது, ‛‛அடுத்த தேர்தலை மனதில் வைத்து கல்லை எறிந்து பார்க்கிறார் திருமா. அதே நேரம், திமுகவுடன் மோதுவது போல் பாவ்லா காட்டி, அதிமுக கூட்டணியிலும் துண்டு போடுகிறார். திருமாவுக்கு திமுக கூட்டணியும் வேண்டும் அதிமுக கூட்டணியும் வேண்டும் என்பது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல் இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கும் போது தான் ஜெயிப்பது கூழா மீசையா என்று தெரியும்'' என்கின்றனர்.