அறுபடை வீடு கொண்ட திருமுருகா: அவதரித்தான் ஆறுமுகன்
அறுபடை வீடு கொண்ட திருமுருகா: அவதரித்தான் ஆறுமுகன்
ADDED : ஜூலை 14, 2025 04:56 AM

படைவீடு என்னும் சொல்லுக்கு, போர் புரிவதற்காக படைத்தளபதி படைகளுடன் தங்கும் இடம் என்று பொருள். முருகன் சூரனுடன் போர் புரியத் தங்கிய இடம் திருச்செந்தூர். அதனால் அத்தலம் படைவீடாகும். மற்ற கோயில்கள் அனைத்தும் திருமுருகாற்றுப் படையில் குறிப்பிடப்படும் ஆற்றுப்படைவீடுகளே. ஆற்றுப்படை என்பதன் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு புலவர் வள்ளல் ஒருவரின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறார். வள்ளல் புலவருக்கு பரிசளிக்கிறார். தன்னைப் போல் கஷ்டப்படும் மற்ற புலவர்களின் பசியும் தீர வேண்டும் என்ற நோக்கத்தில், நீங்கள் இன்ன ஊரிலுள்ள வள்ளலைப் பாடினால் உங்களுக்கும் பொருள் கிடைக்கும், என வழிகாட்டுகிறார். ஆறுதல்படுத்துதலே ஆற்றுப்படுத்தல் ஆயிற்று. இதே போல, நக்கீரர் முருகன் அருள் என்னும் செல்வத்தைப் பெற்றார்.
தன்னைப் போல, மற்றவர்களும் பெற வேண்டும் என்பதற்காக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி,சோலைமலை ஆகிய தலங்களுக்குச் செல்லும்படி வழிகாட்டுகிறார். இத்தலங்கள் மனித மனதை ஆறுதல்படுத்தும் ஆற்றுப் படைவீடுகள். முக்திவாழ்வுக்கு வழிகாட்டும் முத்தான தலங்கள். ஆற்றுப்படை கோயில்களே
ஆறுபடைவீடுகளாக மாறின.
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். சூரபத்மன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். இந்திரலோகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தைப் போக்கும்படி பிரம்மாவிடம் சென்றனர்.
தேவர்களே! சூரபத்மனை உங்களால் அழிக்க முடியாது. ஆனால், நான் சொல்லும் ஆலோசனைப்படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உடனே, மன்மதனின் உதவியை நாடுங்கள். யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சிவனின் தவத்தைக் கலைக்கும்படி கூறுங்கள். அப்போது ஆற்றல் மிக்க சுப்ரமண்யமூர்த்தி அவதரிப்பார்.
அவரால் மட்டுமே சூரபத்மனை அழிக்க முடியும், என்று தெரிவித்தார். சிவனின் தவம் மன்மதனால் கலைந்தது. கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறுசுடர்கள் கிளம்பின. கங்கை நதியில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தன. ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக அவதரித்தனர். அவர்களை ஒன்றாக்கியதால் ஆறுமுகன் அவதரித்தார்.